ஹெல்த் காலண்டர்

நன்றி குங்குமம் டாக்டர்

தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்தோருக்கான தினம் - நவம்பர் 17

தற்கொலை முயற்சியில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வது, மறுபடியும் அந்த முயற்சியில் ஈடுபடாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்த விழிப்புணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17-ம் தேதியன்று தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்தோருக்கான சர்வதேச தினம் (International Survivors of Suicide Day) அனுசரிக்கப்
படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகளவில் 8 லட்சம் பேர் வரை தற்கொலை செய்து கொண்டு  இறக்கின்றனர். இப்படி ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒருபுறமிருக்க, தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் இன்னும் அதிகம்பேர் உள்ளனர்.

15 முதல் 29 வயது வரையிலுள்ள இளைஞர்களிடையே தற்கொலையே இறப்புக்கான இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது. பூச்சி மருந்து உட்கொள்ளுதல், தூக்கு மற்றும் துப்பாக்கியால்  சுட்டுக் கொள்வதே மிகவும் பொதுவானத் தற்கொலை முறைகளாக இருக்கிறது.

தற்கொலை ஆபத்துடையோர் ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சி செய்தவர், மனச்சோர்வு, மது மற்றும் போதைப் பழக்கம் கொண்டவர், உணர்வுப்பூர்வமான அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள், சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டவர் போன்ற அனைவரையும் தற்கொலை ஆபத்துடையவர்களாக சொல்லலாம்.

தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்தோருக்கு சில ஆலோசனைகள்

* பல்வேறு வழிகளில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர்களின், அந்த முயற்சி தோல்வியடைந்த பிறகு சில காலம் தன்னம்பிக்கை குறைந்து, வாழ்வில் எந்தவித ஈடுபாடுமின்றி இருப்பார்கள். அவர்களுக்கு மறுபடியும் தற்கொலை செய்யும் எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நபர்கள் தங்கள் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் போன்ற அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது.

* குடும்பமும் நண்பர்களும் இருந்த போதிலும், வாழ்க்கை வாழத் தகுதியற்றது, பயனற்றது என்றும் நம்பிக்கை வறண்டு, எதிர்மறை எண்ணங்களோடு தனிமையாக உணர்ந்தால், ஏன் இப்படி எண்ணுகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாமல் இருந்தால் அதற்குரிய உதவியை நாட வேண்டும்.

* நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை குடும்பத்தினர், நண்பர் அல்லது சக ஊழியரிடம் பேசுங்கள். தற்கொலையைப் பற்றிக்கூட பேசுவதும் நல்லதுதான். அது உங்கள் உணர்வு தெளிவடைய உதவியாக இருக்கும்.

* சமூக, உளவியல், உடலியல், பண்பாடு போன்ற மேலும் சில காரணிகளும் ஒருவருக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட காரணமாக இருக்கிறது. தற்கொலை எண்ணமுடையவர்கள் மற்றும் தற்கொலை முயற்சியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு இருக்கும் இத்தடையை நீக்குவதற்கு, அவர்கள் சமூகப் பிணைப்புடன் இருப்பது நல்லது.  

தற்கொலையைத் தடுப்பது, சமூக ஆதரவு அளிப்பது, தொடர் பராமரிப்பு அளிப்பது, சமூக விலக்கத்துக்கு எதிராகப் போராடுவது, தற்கொலை எண்ணமுடையவர்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் தப்பிப்பிழைத்தவர்களுக்கு உதவுவது போன்ற அனைத்திலும் சமுதாயக்
காரணிகளின் பங்கு முக்கியமானது.

தற்கொலை எண்ணத்தைத் தடுக்க சில வழிகள்

* தற்கொலை எண்ணமுடைய நபரிடம் அதுபற்றி பேசுங்கள். அவர் என்ன நினைக்கிறார், என்ன உணர்கிறார் என்பதைத் திறந்த மனதுடன்
கவனியுங்கள்.

* ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போன்ற நம்பிக்கையான ஒருவருடன் தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்துங்கள். சரியான ஆலோசனை பெற ஒரு மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்வதற்கு உதவுங்கள்.

* ஆபத்து உடனடியாக நிகழும் என்று ஊகித்தால் அவரைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம். பிரச்னையை சரி செய்வதற்குரிய வல்லுநர் உதவியை  நாடுவதோ, குடும்ப நபர்களுக்குத் தகவல் தெரிவிப்பதோ நல்லது.

* பூச்சி மருந்து, மருந்துப் பொருட்கள், துப்பாக்கி போன்ற தீங்கான பொருட்கள் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயிருக்கு ஆபத்து விளைவிப்பவைகளைக் குறைப்பது, அகற்றுவது அல்லது ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் தற்கொலையைத் தடுக்கும் முயற்சிக்கு அதிக பலனளிக்கும்.

*தற்கொலை எண்ணமுடைய நபரின் மனநிலை, சுற்றுப்புறச் சூழ்நிலை போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்காக எப்போதும் அவரோடு தொடர்பில் இருக்க வேண்டும். தற்கொலை எண்ணத்தோடு இருக்கும் ஒருவரைக் கண்டறிந்தால், அவரோடு பேசி திறந்த மனதோடு அவர் சொல்வதைக் கேட்டு உதவி செய்வதாக அவருக்கு நம்பிக்கையளிக்க வேண்டும்.  

சர்வதேச கழிப்பறை தினம் - நவம்பர் 19

2001 நவம்பர் 19-ம் தேதி Jack Sim என்பவரால் உலக கழிப்பறை அமைப்பு (World Toilet Organization) நிறுவப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபையில் 122 நாடுகளின் ஆதரவோடு, இந்த அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை சர்வதேச கழிப்பறை தினமாக அனுசரிப்பது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ம் தேதியன்று சர்வதேச கழிப்பறை தினமாக  (World Toilet Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

2030-ம் ஆண்டிற்குள் உலகிலுள்ள அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் கிடைப்பதற்கு, நிலையான வளர்ச்சி இலக்குகளை தீர்மானித்து அதை செயல்படுத்துவது, கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சரியான முறையில் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்து, பாதுகாப்பாக வேறுவகையில் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம்
அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் 400 கோடி மக்களுக்குக் கழிப்பறை போன்ற பிற அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. உலகில் 3-ல் ஒருவருக்கு சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லை. சுகாதார சீர்கேடுகளால் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் வரை மரணமடைகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கழிப்பறை சார்ந்த சுகாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. பணியிடத்தில் கழிப்பறையும் சுகாதாரமும் இல்லாமல் இருப்பது ஊழியர்களுக்கு வசதியின்மையையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் பணியாளர்களின் வருகை விகிதம், ஆரோக்கியம், மன ஒருமைப்பாடு மற்றும் நிறுவனத்தின் உற்பத்தித் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

பணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மக்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பேணும் வகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சுகாதாரமான கழிப்பறை வசதிகள்  இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மனிதக் கழிவுகளை அகற்றும் முறைஉடல் கழிவுகளை பாதுகாப்பான முறையில், சுற்றுச்சூழல் நலம் குறித்த பொறுப்புணர்வோடு நாம் ஒவ்வொரு
வரும் அகற்ற வேண்டியது அவசியம்.

* உடல் கழிவுகளை மூடப்பட்ட ஆழமான தொட்டி அல்லது குழிக்குள், மனிதர்களோடு நெருங்கிய தொடர்பில்லாதவாறு, சற்று ஒதுக்குப்புறமாக அமைத்து, சரியான முறையில் சேகரிக்க வேண்டும்.
* சேகரிக்கப்பட்ட அந்தக் கழிவுகளை அதற்குரிய இயந்திரங்களின் உதவியோடு சரியான முறையில் அப்புறப்படுத்த  வேண்டும்.
* அப்புறப்படுத்திய கழிவினை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்து உரம் மற்றும் மின்சாரம் தயாரிப்பிற்குப்  பயன்படுத்தலாம்.  

திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதோடு, சுகாதாரமான முறையில்  கழிப்பறைகளைப் பயன்படுத்த அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிப்பறையை உருவாக்க வேண்டும். மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களிலும் சுகாதாரமான பொதுக் கழிப்பறை வசதிகளை  ஏற்படுத்துவதோடு, அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது  அவசியம்.

பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம் - நவம்பர் 15-21

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 15 முதல் 21 -ம் தேதி வரை இந்தியாவில் பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம் (New Born Care Week) கடைபிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் உயிர் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பிறந்த 1000 குழந்தைகளில் 70 குழந்தைகள் ஓராண்டுக்குள் மரணமடைகின்றன என்கிறது புள்ளிவிவரம். பிறந்த குழந்தை இறப்பில் மூன்றில் இரண்டு சதவிகிதம் முதல் வாரத்தில் நிகழ்வதால் குழந்தை பிறந்த தினம் முதல் 4 வாரங்கள் வரை மிக முக்கிய காலகட்டமாக கருதப்படுகிறது.

தொற்று, கருவுக்கும் குழந்தைக்கும் ஆக்சிஜன் குறைவாகக் கிடைத்தல், குறைப்பிரசவம், மகப்பேறில் சிக்கல் மற்றும் பிறப்புக் குறைபாடு போன்றவை பிறந்த குழந்தை இறப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதுபோன்ற குழந்தை இறப்புகளைத் தடுப்பதற்கு தாய்சேய் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வினை தாய்மார்களோடு சேர்த்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

தாய்சேய் பராமரிப்பு பின்வரும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.

பேறுகாலத்துக்கு முன்பான பராமரிப்பு - முதல் நிலை

தாய்க்கு டெட்டனஸ் தடுப்பூசி போடுதல், ரத்த சோகை மற்றும் மிகை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் சத்தான உணவு எடுத்துக் கொள்வது, பேறுகாலத்திற்கு ஆயத்தமாதல், ஆபத்தான அறிகுறிகளைக் கண்டவுடன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது போன்றவை தாய்சேய் பராமரிப்பின் முதல் நிலை.

பேறுகாலப் பராமரிப்பு - இரண்டாவது நிலை

சுகாதாரமான குழந்தைப் பேறு, அதைத் திறனுடன் கையாளுதல், அவசரகால குழந்தைப்பேறு பராமரிப்பை உரிய நேரத்தில் அணுகுதல், கர்ப்ப காலம்
மற்றும் பேறுகாலத்தில் கவனம் செலுத்துதல் போன்றவை இரண்டாவது நிலை.

பேறுகாலத்துக்குப் பிந்தைய பராமரிப்பு - மூன்றாவது நிலை

குழந்தை பிறப்புக்குப் பின் குருதிக் கசிவு, பிறப்பு பாதைக் காயம், கருப்பை பிறழ்தல் போன்ற சிக்கல்களைக் கண்டறிதல், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆலோசனைகளைப் பெறுதல், பிறந்த குழந்தையின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நலத்தைப் பராமரித்தல் போன்றவை மூன்றாவது நிலை.

குழந்தைப் பேறுக்குப் பின் நினைவில் கொள்ள வேண்டியவை குழந்தையைக் கையாளும் முன் சோப்பு அல்லது கிருமிநாசினியால் கை கழுவுதல், குழந்தையின் தலையையும் கழுத்தையும் சேர்த்தவாறு தாங்கிப் பிடிக்கும் நிலைகளை அறிந்து கொள்ளுதல், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பாலூட்டல், 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டி அதற்கு பின்னரே திட உணவுகளை கொடுத்தல் போன்றவற்றை நினைவில் கொள்வது அவசியம். எடை குறைவான பிறப்புக்கு ‘கங்காரு தாய் பராமரிப்பு’ முறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது தாய் தன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துத் தோலோடு தோல் தொடர்புடன் தாய்ப்பால் மட்டுமே அடிக்கடி புகட்ட வேண்டும்.

அமிலப் பின்னோட்ட நோய் விழிப்புணர்வு வாரம் நவம்பர் 18-24

Gastroesophageal reflux disease (GERD) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 18 முதல் 24-ம் தேதி வரையிலான ஒரு வாரம் அமிலப்  பின்னோட்ட நோய் விழிப்புணர்வு வாரமாக(GERD Awareness Week) அனுசரிக்கப்படுகிறது.

இரைப்பையிலுள்ள சாறும், உணவுகளும் இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன. இரைப்பைச்சாற்றில் உள்ள அமிலத்தால் உணவுக் குழாயிலுள்ள சவ்வு பாதிக்கப்படுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்பட்டு Gastroesophageal reflux disease (GERD) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) தீவிரமடைகிறது. இது ஒரு நீண்டகால நோய்.

அதிகளவிலான நெஞ்செரிச்சல் இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறியாக உள்ளது. மேலும் உணவு விழுங்கும்போது வலி, அதிக உமிழ்நீர் சுரத்தல், குமட்டல், நெஞ்சுவலி, நீண்டகால இருமல், தொண்டை அழற்சி, மூச்சுத்தடை போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது. இந்நோயின் அறிகுறிகள் தீவிரமடைந்த நிலையில் சிலருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இரைப்பையில் உள்ள அமிலமானது, உணவுக் குழாய்க்குள் செல்வதால் நெஞ்செரிச்சல் பிரச்னை உண்டாகிறது.

துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, சரியான நேரத்தில் சாப்பிடாதது, முறையான உணவுப் பழக்கமின்மை போன்றவற்றால் இந்த பிரச்னை உண்டாகிறது.

இந்த நோய் தீவிரமாகும்போது உணவுக்குழல் சுருங்கி, சாப்பிடுவதே சிரமமாகி விடுகிறது. மேலும் இந்நோய் உணவுக்குழலில் புற்றுநோய் உண்டாவதற்கும் காரணமாக இருக்கிறது. ECG பரிசோதனை, PH அளவுகளை கண்டறியும் பரிசோதனைகள் போன்றவற்றின் மூலம் இந்நோயின் நிலையைக் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் மூலம்  இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நோய் தீவிரமாகாமல் தடுக்கலாம்.

* உறங்கச் செல்லும்முன் அதிகளவில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* உணவருந்திய பிறகு இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்ல வேண்டும்.   
* சாக்லெட், கொழுப்பு மற்றும் காரம் அதிகமுள்ள உணவு வகைகள், காஃபி போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
* உணவில் 50 சதவிகிதம் பச்சைக் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிடுவது நல்லது. அவரவர் தேவைக்கேற்ப தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
* வயிற்றை இறுக்கும் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
* தினமும் நடைப்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சிகளை செய்வது செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

நீரிழிவு கண்நோய் மாதம் - நவம்பர்

நீரிழிவு நோயால் கண்கள், இதயம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கண்நோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முழுவதும் நீரிழிவு கண்நோய் மாதமாக (Diabetic Eye Disease Month) அனுசரிக்கப்படுகிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் ஏற்படும் கண்புரை, கண் நீர் அழுத்த நோய், கண் விழித்திரை ரத்தக்குழாய் சிதைவு போன்ற நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. நம் கண்களில் உள்ள லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படுவதை கண்புரை நோய் (Cataract) என்று சொல்கிறோம்.

கண்ணின் முன் அறையில் சுரக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதனால் பார்வை நரம்பு பாதிக்கப்படுவதை கண் நீர் அழுத்த நோய் (Glaucoma) என்று சொல்கிறோம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் விழித்திரையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பினை நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy) என்று சொல்கிறோம்.

நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு சிறிதாக இருந்தாலும் அது நாளடைவில் கண் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கிறது. நீரிழிவு நோயாளிகளில் பத்தில் இரண்டு பேர் டயாபெட்டிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் பாதிப்பினை தக்க சமயத்தில் உரிய பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து, சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பார்வை இழப்பினைத் தடுக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தேவைப்படுகிறபோது கண் அறுவை சிகிச்சை அல்லது லேசர் சிகிச்சையை மருத்துவர் ஆலோசனைப்படி உரிய நேரத்தில் செய்துகொள்வதன் மூலம் நம் பார்வைத்திறனை பாதுகாத்துக்
கொள்ளலாம்.  

தொகுப்பு: க.கதிரவன்

× RELATED ஹெல்த் காலண்டர்