×

நான் முதன்மையானவள்!

நன்றி குங்குமம் தோழி

செய்தி வாசிப்பாளர் ஈவ்லின் பிரசன்னா

இன்று பலரில் சிலர் அவரவர்களுக்காகவே நேரத்தை ஒதுக்குவது பெரும்பாடாக இருக்கும் போது, “எனக்கென்று  நேரம் ஒதுக்குவதைவிட என்னுடைய நேரத்தை மற்றவர்களுக்காக ஒதுக்க நினைப்பவள் நான்” என்று பல வேலைகளைச் செய்து பம்பரமாகச் சுழன்று வருகிறார் நியூஸ் ரீடர் ஈவ்லின் பிரசன்னா.

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பதோடு நின்று விடாமல், பல சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வரும் ஈவ்லினின் அம்மா கிரேஸ் நிர்மலா  ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற தலைமை ஆசிரியர். அப்பா சாமுவேலும் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருமணமாகி செட்டிலானது திருவள்ளூர்.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவள்ளூர் மாவட்டம். அப்பா எப்போதும் ‘தூர்தர்சன்’ல செய்தி பார்த்துக் கொண்டிருப்பார். சின்ன பொண்ணான எனக்கு ஷோபனா ரவி வாசிப்பின் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. அவங்க திரையில் வந்ததும், அவங்க எப்படி பேசுறாங்க வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்கிறாங்கன்னு பார்ப்பேன். வளர்ந்த பிறகு அம்மாவிடம் ஷோபனா ரவி போல் செய்தி வாசிக்கணும்ன்னு என் ஆசையை சொன்னேன்.

அம்மா அதற்கு, ‘‘தமிழ் மொழியை நல்ல உச்சரிப்போடு பேசக் கற்றுக் கொள்ளணும்’’ன்னு சொன்னாங்க. அதை மனதில் வைத்து எம்.ஏ. பி.எட்., தமிழ் படித்தேன். படித்துக் கொண்டிருக்கும் போதே லோக்கல் சேனலில் சில நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தேன். அப்போதான் எனது ஆர்வத்தைப் பார்த்த என் தோழி இளவரசி தமிழன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாள்.

அதனைத் தொடர்ந்து பல சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடந்த பத்து வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறேன்” என்றார் ஈவ்லின்.செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும், ‘போலீஸ் நியூஸ் மீடியா’வில் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவராக இருக்கும் ஈவ்லின், தனக்கு சமூக சேவையின் மீது ஆர்வம் வருவதற்கான காரணம் பற்றிக் கூறும் போது, “அம்மாவுக்கு சமூக சேவைல ஈடுபாடு அதிகம். கிறிஸ்தவக் குடும்பம் என்பதால், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் கஷ்டத்திலிருக்கும் கிறிஸ்தவக் குடும்பங்களுக்குத் துணிமணிகள் எடுத்துக் கொடுப்பது அவங்களுக்குப் பிடிச்ச விஷயம். இதற்காகவே தன்னுடைய வருமானத்தில் ஒரு பெரிய பங்கை ஒதுக்குவாங்க.

இது போன்று அம்மாவின் செயல்கள் பலவற்றைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கும் தானாகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் மட்டுமில்லாமல், இதில் பலரும் இணைந்து செயலாற்றலாம் என்ற நோக்கில் ‘பிரஜோஷ் சாரிட்டி டிரஸ்ட்’ என்கிற அமைப்பு தொடங்கினேன்.

இதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களை ஓர் இடத்தில் வைத்து பராமரிப்பது, கிராமப் புறங்களில் உள்ள  ஏழைப் பெண்கள், குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்வதோடு உணவு, புத்தகம், துணிகள் கொடுத்து உதவுவது என்பது தான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இதனோடு திருவள்ளூரிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலிருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் இருளர் மக்களுக்காகவும் வேலை செய்து வருகிறேன். படிப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கும் இவர்களின் தேவை அறிந்து அதை பூர்த்தி செய்து வருகிறேன்.

‘சானிடரி நாப்கின்’ என்றால் என்னவென்று தெரியாத இங்குள்ள பெண்களுக்கு அதன் நன்மைகள், ஆரோக்கியம் பற்றி எடுத்துக் கூறி பயன்படுத்த வைத்திருக்கிறேன்.நியூஸ் ரீடர் வேலையோடு சிறுசிறு வேலைகள் செய்து வந்த என் வாழ்நாளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது வர்தா புயல். அதன் தாக்கம் தான் மக்களின் அடிப்படை தேவை என்ன என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அன்று முதல் அவர்களின் தேவைகளை என்னால் முடிந்த அளவுக்கு பூர்த்தி செய்து வருகிறேன்’’ என்றவர் திருநங்கைகள் மற்றும் பெண்களுக்காக சுயதொழில் குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

‘‘திருவள்ளூர் பகுதில நிறைய திருநங்கைகள் வாழ்ந்து வராங்க. அவர்கள் சுயதொழில் மூலம் பல பொருட்களை தயாரித்து வருகிறார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், ஒவ்வொரு வருடமும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பதற்கு ஸ்டால் போன்று அமைத்து தருகிறோம். கணவனை இழந்து வறுமையோடு போராடுகிறவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்காக மெழுகுவர்த்தி தயாரிப்பு மாதிரியான சுயதொழில் பயிற்சி கொடுக்கிறோம். செய்தி வாசிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் போன்றவர்களுக்காகப் பயிற்சியும் அளிக்கிறோம்” என்றார்.

சத்தமில்லாமல் பல வேலைகளைச் செய்துவரும் ஈவ்லினை சிறப்பிக்கும் வகையில், ‘இன்டர்நேஷனல் குளோபல் யுனிவர்சிட்டி’ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறது. நிறைய அமைப்புகள் சிறந்த சமூக சேவகர் விருதுகள் வழங்கியுள்ளனர். ‘‘என் வேலையைப் பார்த்து சிலர், ‘குட்டி அன்னை தெரசா’-ன்னு சொல்லி பாராட்டுவாங்க” என்று கூறி பூரிக்கும் ஈவ்லின், “ஒரு சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவி கேட்பார்கள்.

அதற்கும் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம். என்னதான் அரசு அடிப்படை கல்விக் கொடுப்பதில் நல்ல நல்ல திட்டங்கள் அமைத்து இருந்தாலும், அதனை சரியான முறையில் செயல்படுத்துவதில்லை. அதனை வழிநடத்தினால், அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளின் தரத்திற்கு உயர்த்த முடியும்.

நான், எதிலும் முதன்மையானவளாக இருப்பதோடு அதில் முதலிடம் பிடித்துத் தனித்துவமாகத் தெரிய வேண்டும். சொந்தக் காலில் நிற்பது என் குணம். வாழ்நாள் முழுக்க அதே குணத்தோடு இருந்து, அதை மற்றவர்களுக்கும் வழி காட்டணும். இதுவரையிலும் அப்படித்தான். இனியும் அப்படித்தான். அந்த வகையில் என் மூலமாகவும், என் டிரஸ்ட் மூலமாகவும் நிறையப் பேருக்கு உதவுவதோடு, நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான் என் லட்சியம்” என்றார்.

அன்னம் அரசு

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!