×

இயக்குநராகவும் சாதனை படைத்த விஜய நிர்மலா

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்-64

 
பெண்களின் சாதனைகள் பொதுவாகவே சமூகத்தின் கண்களுக்குப் புலப்படுவதே இல்லை. நடிகை விஜய நிர்மலாவைப் பொறுத்தவரை அவரது திரையுலகப் பங்களிப்பு நடிப்பதோடு மட்டும் முற்றுப் பெற்று விடவில்லை. ஒரு பெண்ணாக அவரது சாதனை என்று குறிப்பிட வேண்டுமானால் அது அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கையே. 47 படங்களை இயக்கியதன் மூலம் 2002 ஆம் ஆண்டில் கின்னஸ் ரெக்கார்ட் புத்தகத்திலும் இடம் பெற்ற மாபெரும் சாதனைப் பெண்மணி என்ற அளவில் முதலிடம் வகிக்கிறார்.

ஆம்! உலக அளவில் வேறு எந்தப் பெண்ணும் இதுவரை செய்ய முடியாத சாதனைப் பட்டியல் அது. இதில் தெலுங்கில் மட்டுமே 44 படங்கள்; தமிழில் ஒன்றும் மலையாளத்தில் இரண்டுமாக மொத்தம் 47 படங்கள். உடனே அவர் இயக்கிய படங்களின் தரங்களைப் பற்றிய விமர்சனங்களில் இறங்கி விட வேண்டாம்.

எந்த ஒரு வெள்ளிவிழா பட இயக்குநர்கள் இயக்கிய படங்களின் தரத்திற்குச் சற்றும் குறைவான படங்களை ஒன்றும் அவர் இயக்கி விடவில்லை. நாயக நடிகைகள் உச்சத்தில் இருக்கும்போது அவர்களின் ஒவ்வோர் அசைவுக்கும் அளிக்கப்படும் மதிப்பும் விளம்பரமும் அவர்களின் சாதனைகளுக்கு ஏன் அளிக்கப்படுவதில்லை என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டோமென்றால் வேறு எந்த கேள்விக்கும் இடமிருக்காது.

தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்கள் என மூன்று தென்னிந்திய மொழிகளிலுமாக இவர் நடித்து முடித்த படங்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் மேல். அது மட்டுமல்லாமல் பத்மாலயா ஸ்டுடியோ, விஜய கிருஷ்ணா மூவீஸ் மற்றும் சின்னத்திரை நிறுவனமான பத்மாலயா டெலி பிலிம்ஸ் போன்ற நிறுவனங்களின் நிர்வாகியாகவும் தெலுங்குத் திரையுலகில் சாதனைப் பெண்மணியாகவும் திகழ்ந்திருக்கிறார்.

நடிகை, இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், ஸ்டூடியோ நிர்வாகி, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் என பன்முகத்திறன் மிக்கவராக திரைத் தொழிலின் நுட்பம் அறிந்தவராக அறுபதாண்டு காலத்துக்கும் அதிகமாகத் திரையுலகில் இயங்கியவர். திரைப்படத் தயாரிப்பு தொடர்பான பல அமைப்புகளிலும் அங்கம் வகித்தவர்.

 தனது 75வது வயதில் கடந்த ஜூன் 27 அன்று ஹைதராபாத்தில் மாரடைப்பால் மறைந்த விஜய நிர்மலா எனும் மாபெரும் சாதனையாளருக்கு முதற்கண் இரங்கல்களும் அஞ்சலியும். இத்தொடரில் அவரைப் பற்றி அஞ்சலிக் கட்டுரை எழுத நேரும் என கனவிலும் நினைத்ததில்லை.

சிறு வயது முதலே தொடங்கிய திரைப்படங்களுடனான பயணம்விஜய நிர்மலாவின் தந்தை தன் பணியின் பொருட்டு ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தவர். அவர் பணியாற்றியது விஜயா வாஹினி ஸ்டுடியோவில் திரைப்படங்கள் சார்ந்த தொழிலில். பிப்ரவரி 20, 1944ல் பிறந்தவர் நிர்மலா. ஆம், அதுதான் அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர்.

நிர்மலாவின் பிறப்பும் வளர்ப்பும் சென்னையிலேயே நிகழ்ந்தது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பம் என்றாலும் சென்னையின் பள்ளிப்படிப்பும் சூழலும் அவருக்குத் தமிழையும் சேர்த்தே கற்பித்தன. தந்தை திரைப்படத் துறையில் பணியாற்றியதால், சிறு வயது முதலே அவற்றுடனான ஊடாட்டம் தொடங்கி விட்டது நிர்மலாவுக்கு. 6 வயது சிறுமியாக இருந்தபோதே டி.ஆர்.மகாலிங்கம் - எஸ்.வரலட்சுமி இணைந்து நடித்த ‘மச்சரேகை’ தமிழ்த் திரைப்படத்தில் சிறு வயது ஜூனியர் மகாலிங்கமாக, ஆண் குழந்தை வேடமேற்று நடித்தார்.

நிர்மலாவின் திரையுலகப் பயணம் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் மூலமே தொடங்கியது. இப்படம் 1950ல் வெளியாகி நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது நிர்மலாவுக்கு. மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு 1956ல் தேடி வந்தது. தந்தையாரின் ஆலோசனையின் பேரில் அப்படத்தில் நடிக்க நிர்மலாவும் தயாரானார். என்.டி.ராமாராவ் - அஞ்சலி தேவி போன்ற நட்சத்திரங்கள் நடித்த ’பாண்டுரங்க மகாத்மியம்’ படத்தில் சிறு வயது பாலகிருஷ்ணனாகத் தோன்றினார். இப்படம் 1957ல் வெளியானது.

இதற்கிடையில் நிர்மலாவின் புகைப்படங்கள் கொண்ட ஆல்பம் ஒன்று குடும்ப நண்பர் ஒருவரின் கண்களில் தென்பட, இவ்வளவு களையான முகவெட்டும், துறுதுறுப்பும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும் கொண்ட இந்தச் சிறுமிக்கு எதிர்காலத்தில் திரைத்துறையில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அந்த ஆல்பத்தை எடுத்துச் சென்று வேறு சிலரின் பார்வைக்கும் கொடுத்தார்.

அது மலையாளத் திரையுலகின் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ. வின்சென்ட் பார்வைக்குச் சென்று சேர்ந்தது. நிர்மலாவை பின்னர் நேரில் பார்த்த வின்சென்ட், தான் இயக்கும் ‘பார்கவி நிலையம்’ மலையாளப் படத்தின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பினை அளித்தார்.

வைக்கம் முகம்மது பஷீரின் கதை நாயகியானார்.1964 நவம்பரில் வெளியான ’பார்கவி நிலையம்’ வைக்கம் முகம்மது பஷீரின் ‘நீல வெளிச்சம்’ சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். படத்துக்கான திரைக்கதையையும் பஷீரே எழுதி அளித்திருந்தார். கருப்பு வெள்ளையில் அற்புதமானதோர் காதல் படம், ஆனால் அது திகிலூட்டும் பேய்ப் படமாகவே இன்று வரை சுட்டப்படுகிறது. வின்சென்ட்டின் காமிரா சுழன்றடிக்கும் காற்றாகப் பல காட்சிகளில் தோன்றும். பிரேம் நசீர், மது என இரட்டைக் கதாநாயகர்கள். நசீர் இசைக் கலைஞராகவும் மது எழுத்தாளராகவும் தோன்றினார்கள்.

இளமையான அழகு கொஞ்சும் நிர்மலா, பார்கவிக் குட்டியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் நட்சத்திர நடிகையாகவும் மாறினார். மலையாளத்தில் அறிமுகம் அழகாகவே அமைந்தது நிர்மலாவுக்கு. நிரந்தரமான பெயர் மாற்றமும் இப்படத்தில் நிகழ்ந்தது.

ஏற்கனவே தெலுங்குத் திரையுலகில் நிர்மலா என்ற பெயரில் ஒரு நடிகை இருந்தார். (அவர் தமிழிலும் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ படத்தில் பாக்கியராஜின் பாட்டியாக நடித்த சீனியர் நிர்மலா). அந்த நேரத்தில் வெண்ணிற ஆடை திரைப்படமும் தயாராகி வெளியாகக் காத்திருந்தது. அப்படத்திலும் ஒரு நிர்மலா அறிமுக நடிகையாக நடித்திருந்தார்.

ஒரே நேரத்தில் இரு நிர்மலாக்கள் அறிமுகமாகும்போது ஏற்படும் பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு இவர் விஜய நிர்மலா ஆனார்; அவர் அறிமுகமான படத்தின் பெயருடனே வெண்ணிற ஆடை நிர்மலாவாக நிலைத்தார். தெலுங்குத் திரையுலகில் சில காலம் நீரஜா என்னும் பெயரில் விஜய நிர்மலா அறிமுகமானாலும் அந்தப் பெயர் நீடிக்கவில்லை. இறுதிவரை விஜய நிர்மலாவாகவே தொடர்ந்தார்.

மலையாள மொழி இவருக்குத் தாய்மொழி இல்லை. மலையாளத்தில் நாயகியாக அறிமுகமான பத்தாண்டுகளுக்குள் அங்கும் தன் அழுத்தமான முத்திரையைப் பதித்து, சில சாதனைகளையும் உருவாக்கத் தவறவில்லை. இவர் நடித்து 1965ல் வெளியான ‘கல்யாண ராத்ரியில்’ படம் தான் மலையாளத்தின் வயது வந்தோர்க்கான சான்றிதழ் பெற்று வெளியான முதல் படம்.

அதேபோல, 1974ல் விஜய நிர்மலாவின் இயக்கத்தில் வெளியான ‘கவிதா’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர் இதே படத்தைத் தெலுங்கிலும் கிருஷ்ணாவை கதாநாயகனாக்கி, இறுதிக் காட்சிகளுக்கு வேறு வடிவம் கொடுத்து இயக்கி, தயாரித்து வெளியிட்டார்.

இரு மொழிகளிலும் இப்படம் இவருக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. இதற்குப் பிறகுதான் நடிகை ஷீலா ‘யக்ஷ கானம்’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இதே படத்தை தெலுங்கில் ‘தேவுடு கெலிச்சது’ என்று விஜய நிர்மலாவும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்க வீட்டுப் பெண்ணாக உரிமையுடன் தமிழுக்கு வந்தவர்1950ல் வெளியான விஜயா வாஹினியின் தயாரிப்பான ’சௌகார்’ தெலுங்குப் படம், மீண்டும் 1965ல் புதிய ஒப்பனை பூசிக் கொண்டு அவர்களின் தயாரிப்பாகவே ‘எங்க வீட்டுப் பெண்’ என்று வெளியானது. இப்படத்தில் நாயகியாக விஜய நிர்மலா அறிமுகமானார்.

ஒரு அறிமுக நாயகியாக அல்லாமல், அனுபவம் மிக்க நடிகையாக பண்பட்ட நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். 60களுக்கே உரிய குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை ஜெயிக்கவே செய்தது. ‘சிரிப்புப் பாதி அழுகை பாதி சேர்ந்த்தல்லவோ மனித ஜாதி’, ‘இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா’, ‘கால்களே நில்லுங்கள்’, ‘கார்த்திகை விளக்கு திருக்கார்த்திகை விளக்கு’ போன்ற அற்புதமான பல பாடல்களைக் கொண்ட படம். இன்றைக்கும் பாடல்கள் காட்சிகளை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

 அடுத்த படம் ‘சித்தி’ விஜய நிர்மலாவின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. இளம் கல்லூரி மாணவியாக, தாயை இழந்த தம்பி, தங்கை களுக்குப் பொறுப்புள்ள மூத்த சகோதரியாக சித்தியின் மீது அன்பைப் பொழியும் மகளாக, சித்தியின் சகோதரனை தாய் மாமனாக ஏற்று அவனையே காதலனாகவும் வரித்துக் கொண்டு அவனுக்காகத் தியாகங்களை மேற்கொள்பவளாகப் பல அவதாரங்களை அவர் எடுக்க வேண்டியிருந்தது. ‘சந்திப்போமா... இன்று சந்திப்போமா?’ பாடல் அக்காலக் காதலர்களின் ரகசியத் தூதனுப்பும் சூசகப் பாடல்.

வாயாடிப் பெண்ணாக வரிந்து கட்டியவர்

‘பணமா பாசமா’ படத்தின் இலந்தைப்பழ வண்டிக்காரப் பெண், தமிழில் அதுவரை அவர் ஏற்று நடித்த எல்லா வேடங்களையும் தூக்கி விழுங்கி விட்டாள். எல்.ஆர். ஈஸ்வரி பாடிய ‘எலந்தப் பயம்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் விஜய நிர்மலாவை ‘அலேக்’ நிர்மலாவாகக் கொண்டு சேர்த்தது. இன்றைய தலைமுறைக் குழந்தைகளும் கூட தொலைக்காட்சி சானல்கள் நடத்தும் பாட்டுப் போட்டிகளில் தவறாமல் தேர்ந்தெடுத்துப் பாடும் உற்சாகம் மிக்க ஒரு பாடல் அது.

அவர் ஏற்ற மங்களகரமான, குடும்பப்பாங்கான, அமைதியான வேடங்களை எல்லாம் அது காலி செய்து விட்டது. இன்றைக்கும் தமிழில் விஜய நிர்மலா என்றால் அது ’எலந்தப் பயம்’ பாடல் காட்சியையும் துடுக்குத்தனமும் துறுதுறுப்பும் மிகுந்த அந்தக் கதாபாத்திரத்தையுமே மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தும். இதற்குப் பின்னரும் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் எலந்தப் பயத்தை அவை எட்டிக்கூட பிடிக்க முடியவில்லை. இயல்பாகவே அம்மாதிரியான வாயாடிப் பெண் பாத்திரம் அவருக்குப் பொருந்திப் போயிற்று.

‘உயிரா மானமா’ படத்திலும் ஏறக்குறைய வாயாடிப் பெண்தான். ‘சவ்வால்ல்லே சமாளி... தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி’ என்று எல்.ஆர்.ஈஸ்வரி இவருக்காகப் பாடுவார். ஜெய்சங்கருடன் இணைந்து நடித்த அந்த டூயட் பாடலும் அக்காலத்தில் மிகப் பிரசித்தம். குரலில் குழைவைச் சேர்த்துக் கொண்டு, ‘வயசிருக்கு மனசிருக்கு பவிசிருக்கு... வயசு வந்த சின்னக்குட்டி எதிரெருக்கு... சவ்வால்லே... முடிஞ்சா சமாளி...’ என்று ஈஸ்வரி பாட, விஜய நிர்மலாவும் ஜெய்யும் ஆட... அது முற்றிலும் வேறு ரகம்.

‘ஞான ஒளி’ படத்திலும் மிகக் குறைந்த நேரமே தோன்றினாலும் மிக நிறைவானதொரு பாத்திரம். எலியும் பூனையுமான நாயகனும் நாயகியும் எந்த நேரமும் எதிரும் புதிருமாக அடாவடித்தனமாகச் சீறிக் கொண்டாலும், காதல் என்ற ரசவாதம் மிக ரகசியமாக அவர்களுக்குள் பற்றிக் கொள்வதும் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக இருவரும் சந்தித்துக் கொள்வதும், வீட்டின் ஓட்டுக்கூரை மீது அமர்ந்து பாடும் ‘அம்மாக்கண்ணு சும்மாச் சொல்லு ஆசை இல்லையோ... என் மேல் ஆசை இல்லையோ....’ அனைவரையும் கவர்ந்த ரசமான காதல் அனுபவம். அதற்குள் சட் சட்டென்று கல்யாணம், பிரசவம், அதில் பிள்ளையைப் பெற்றுப் போட்டு விட்டு நாயகி மரணம் என்று அவருக்கான காட்சிகள் மிக விரைவாக ஓடிக் கடந்து விடும்.

சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக இந்த ஒரு படத்தில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு விஜய நிர்மலாவுக்குக் கிட்டியது. குறையில்லாமல் அவரும் அதைச் செய்து முடித்திருந்தார். ஆனால், இவ்வளவு திறமையான ஒரு நடிகையைத் தமிழ்த் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. 1966ல் ‘ரங்குல ராட்னம்’ படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார். பிரதான நாயகி வாணிஸ்ரீ. இப்படத்தில் இன்னுமொரு குட்டி நட்சத்திரமும் அறிமுகமானார். பின்னர் அவர் இந்தித் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். அவர் பேபி பானு ரேகாவாக அறிமுகமான ரேகா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிப் படங்களிலும் இடைவெளி இல்லாமல் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருந்த விஜய நிர்மலாவுக்கு 1967ல்முதன்முதலாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணாவுடன் ‘சாக்ஷி’ தெலுங்குப் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தப் படத்தின் இயக்குநர் பாப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் வேலை வாங்கும் விதம், குறித்த நேரத்துக்குள் நேர விரயமின்றித் திட்டமிடலுடன் காட்சிகளை எடுத்து முடிக்கும் பாங்கு அனைத்தும் விஜய நிர்மலாவைக் கவர்ந்தன.

அதுதான் இயக்குநராகவும் தான் முன்னேற வேண்டும் என்ற பொறியை அவருக்குள் ஏற்படுத்தியது. கிருஷ்ணாவும் அதற்குத் தூண்டுதலாக இருந்தார். அதுவே கிருஷ்ணாவுடன் காதல் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்தது. அதன் பின் கிருஷ்ணா - விஜய நிர்மலா ஜோடி பல வெற்றிப் படங்களை அளித்திருக்கிறார்கள். அத்துடன் 47 படங்களில் இருவரும் இணைந்தும் நடித்திருக்கிறார்கள். நிரந்தரமாக ஹைதராபாத்தில் குடியேறிய பின்னர் தமிழ், மலையாளப் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார்.

கசந்து கடந்து போன மண வாழ்வு

முன்னதாக விஜய நிர்மலாவுக்கு மிக இளம் வயதிலேயே வி.கே. மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தியுடன் திருமணமாகியிருந்தது. இவர் நடிகை விஜயலலிதாவின் சகோதரர். கப்பல் கட்டும் துறை சார்ந்த பொறியாளர். இத்தம்பதிகளுக்கு நரேஷ் என்ற மகனும் உண்டு. மகன் நரேஷ் பிறந்த சில ஆண்டுகளிலேயே இவர்களுக்கு விவாகரத்தும் ஆகி விட்டது.

நடிகர் கிருஷ்ணாவுக்கும் சொந்த மாமன் மகள் இந்திரா தேவியுடன் திருமணமாகி ரமேஷ் பாபு என்ற ஒரு மகன் உண்டு. இந்த நிலையில் கிருஷ்ணா, முதல் மனைவி இந்திரா தேவியின் சம்மதம் பெற்று விஜய நிர்மலாவைத் திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணா - விஜய நிர்மலா தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. விஜய நிர்மலாவை மணந்து கொண்ட பிறகு, முதல் மனைவிக்கு மூன்று மகள்களும், தற்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகன் மகேஷ் பாபுவும் பிறந்தனர்.  

இயக்கம் தந்த ஈர்ப்பால் சாதித்தவர்

நடிப்பை விடுத்து அல்லது அதற்கு இரண்டாம் இடத்தை அளித்து இயக்கத்தின் பால் கவனம் செலுத்தியதால் திரையுலகில் அவரால் நீண்ட காலம் செயல்பட முடிந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு நடிகையாக அதிலும் நாயகியாகக் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே திரையில் நிலைத்திருக்க முடியும் என்பதுதான் திரையுலகின் நிதர்சனம்.

1971ல் ‘மீனா’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கியதன் மூலம் தெலுங்குத் திரையின் இயக்குநர்களாக ஏற்கனவே நன்கு அறியப்பட்ட பானுமதி, சாவித்திரி இவர்களை அடுத்து விஜய நிர்மலாவும் இடம் பிடித்தார். தொடர்ச்சியாகத் தெலுங்கில் 44 படங்களை இயக்கியதன் மூலம் கின்னஸ் சாதனையை நிகழ்த்திக் காட்டி தெலுங்குத் திரையின் சாதனை பெண் இயக்குநராக முதலிடத்தையும் பிடித்து விட்டார். கணவர் கிருஷ்ணா, மகன் நரேஷ் இவர்களையும் தன் இயக்கத்தில் பல படங்களில் நடிக்க வைத்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கிருஷ்ணா இருவரையும் இணைத்து நாயகர்களாக்கி 1984ல் ’பெஜவாடா பெப்புலி’ என்ற படத்தை இயக்கினார். சிவாஜி இதில் அப்பா - மகன் என இரு வேடங்களை ஏற்றுள்ளார். வில்லனால் அப்பா சிவாஜி கொல்லப்பட, குடும்பமே சிதைந்து சிதறிப் போக,, இருபத்தைந்து ஆண்டுகளின் பின் பிரிந்து போன சகோதரர்களும் அம்மாவும் மீண்டும் சந்திக்கும் வழக்கமான ஃபார்முலா கதைதான். அதையும் சுவாரசியம் குறையாமல் திரைக்கதை அமைத்து இயக்கி வெற்றிப்பட வரிசையில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். நாயகிகளாக ப்ரியாவும் ராதிகாவும் நடிக்க நன்கு ஓடிய ஒரு படம்.

ஏற்கனவே சிவாஜியை தன்னுடைய சொந்தத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ’பிராப்தம்’ தமிழ்ப் படத்தில் நடிக்க வைத்த பெருமை சாவித்திரிக்கு உண்டு. ஆனால் அந்தப் படம் அவரது திரையுலக வாழ்வின் திசைப் போக்கையே மாற்றியது. விஜய நிர்மலா அந்தவிதத்தில் மிகவும் சாமர்த்தியமான இயக்குநர்.

சிவாஜியை முழு நீளத் தெலுங்குப் படத்தின் நாயகனாக்கி இயக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர்.  தெலுங்குத் திரையுலகில் நீண்ட காலம் அவர் ஆற்றிய சேவைகளுக்காகவும் பெண் இயக்குநராக அவர் செய்த சாதனைகளுக்காகவும் 2008 ஆம் ஆண்டு ரகுபதி வெங்கையா விருது அளித்து கௌரவிக்கப்பட்டார்.

விஜய நிர்மலா நடித்த தமிழ்ப் படங்கள்

மச்ச ரேகை, எங்க வீட்டுப் பெண், சித்தி, பந்தயம், நீலகிரி எக்ஸ்பிரஸ், பணமா பாசமா, சிரித்த முகம், சத்தியம் தவறாதே, சோப்பு சீப்பு கண்ணாடி, உயிரா மானமா,  அன்பளிப்பு, என் அண்ணன், யானை வளர்த்த வானம்பாடி மகன், ஞான ஒளி, புதிய மனிதன், சுமங்கலி கோலம்.

விஜய நிர்மலா இயக்கிய படங்கள்

மீனா, கவிதா, தேவதாஸு, தேவுடெ கெலிச்சது, பஞ்சாயத்தி, மூடு புவ்வுலு ஆறு காயலு, ஹேமா ஹேமீலு, ராம் ராபர்ட் ரஹீம், கில்லாடி கிருஷ்ணுடு, சிரிமல்லி நவ்விந்தி, சந்தானம் சௌபாக்யம், போகி மந்த்தலு, அந்த்தம் கடிதி ஆரம்பம், டாக்டர் சினி ஆக்டர், பெஜவாடா பெப்புலி, முக்ய மந்த்ரி, லங்க்கே பிந்தேலு, சாகசமே நா ஊபிரி, ப்ரஜால மனிஷி, யெஸ் நேனன்ட்டே நேனே, புட்டிண்ட்டி கௌரவம், நேரமு சிக்ஷா, ப்ரேமா சங்கெல்லு, முகோபி, பாக சதிஷ்ட்டா, கருணாகர், பின்னி. கவிதா, சட்டம்பி கிருஷ்ணன் (மலையாளம்), சுமங்கலி கோலம் (தமிழ்).

(ரசிப்போம்!)
ஸ்டில்ஸ் ஞானம்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!