அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள் திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை: எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள், திமுக என்பது  யாராலும் அடக்க முடியாத யானை என்று எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: திமுக அரசு செய்துள்ள சாதனைகளைத் தொடர்ந்து சொல்ல வேண்டுமானால்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட  வழக்குகள்-மக்களுக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான  வழக்குகள் - அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

கொரோனா தொற்றால்  பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி  மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.3000, பெற்றோரில் ஒருவரை  இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சம், கல்வி மற்றும் விடுதிக்  கட்டணத்தை அரசே ஏற்கும் என இப்படி பல்வேறு சலுகைகளை அறிவித்துச்  செயல்படுத்தியிருக்கிறோம்.  நீட் தேர்வு தாக்கம்  குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில்  ஆணையம், தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க  ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் முருகேசன் தலைமையில் ஆணையம்  அமைக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்ட 15 எண்ணெய்க் கிணறுகளுக்கு அனுமதி  மறுக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு  ஆளுநரின் உரை மூலமாக ஏராளமான கொள்கை அறிவிப்புகளைச் செய்திருக்கிறோம்.

இந்த  ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று கூறுவோர்க்கு இதுதான் என்னுடைய பதில்.  இதுவரை ஐம்பது நாட்களுக்குள் செய்திருக்கக்கூடிய மிக முக்கியமான சாதனைகளில்  சிலவற்றைத்தான் நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.   ஆளுநர் உரை குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்,  “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில்  மணியோசையும் இல்லை. யானையும் இல்லை” என்று சொன்னார்கள். யானை என்று  சொன்னதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்.   அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி  கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறேன். நான்கு கால்கள் தான் யானையினுடைய பலம்.

 ‘சமூகநீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை’ ஆகிய நான்கின்  பலத்தில் தான் திமுகவும் நிற்கிறது; இந்த அரசும் நிற்கிறது.   இன்றைய நிதி நிலைமையில், ஏழை - எளிய,  நடுத்தர மக்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் - வாழ்வாதாரத்தை இழந்து  நிற்பதால், அவர்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளித்து வருகிறோம். சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் செயலாற்றுவோம்  என்ற என்னுடைய உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கோருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக அறிக்கையில் இருப்பதுதான் ஆளுநர் உரையில் உள்ளது

திமுக  தேர்தல் அறிக்கையில்  சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள்தான் ஆளுநர் உரையில்  இடம்பெற்றுள்ளன. வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை,  மீண்டும் உழவர் சந்தைகள், இந்திய  அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க  வேண்டும், சிறு குறு தொழில்கள்  மீட்டெடுப்பு, வட மாவட்டங்களில் தொழில்  பெருக்கம், புதிய துணை நகரங்கள்,  தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு  நிறுவனங்களிலும் பொதுத் துறை  நிறுவனங்களிலும் தமிழர்க்கு முன்னுரிமை, 69  விழுக்காடு  இடஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு,  கச்சத்தீவு  மீட்பு, நீட் ரத்து, உள்ளாட்சித் தேர்தல், பட்டியலினத்தவர்  பணியிடம்  நிரப்புதல்,

சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு  அமைக்கப்படும்,  திருக்கோயில்களின் பராமரிப்பைச் செம்மைப்படுத்த - ஆலோசனை  வழங்க மாநில  அளவில் உயர்மட்ட ஆலோசனைக் குழு, பணிபுரியும் மகளிருக்கு  மாவட்டந்தோறும்  மகளிர் விடுதிகள், சச்சார் குழுவின் பரிந்துரைகளை இந்த அரசு  திறம்பட  செயல்படுத்தும்,சேவைகள் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்,  நிதிநிலை  குறித்த வெள்ளை அறிக்கை, பொருளாதாரத்தை மீட்க வல்லுநர் குழு-  இப்படி  எத்தனையோ அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. இவை  அனைத்தும்  திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருப்பவைதான்.

டெலிபோன் டைரக்டரி

ஆளுநர்  உரையில் அதைக்  குறிப்பிடவில்லை, இதைக் குறிப்பிடவில்லை என்பது சரியான  குற்றச்சாட்டாக  இருக்க முடியாது. ஒரு புத்தகத்தில் அனைவருடைய பெயரும்  இருக்க வேண்டுமென்று  சொன்னால், அது டெலிபோன் டைரக்டரியாகத்தான் இருக்க  முடியும். இந்த ஆளுநர்  உரை என்பது திமுக அரசாங்கம் போகும் பாதையை டைரக்ட்  பண்ணும் புத்தகம். இந்த  உரைமீது கருத்துச் சொன்ன, ஆலோசனைகள் சொன்ன அத்தனை  பேருக்கும், அதேபோன்று,  நன்றி சொல்லி பாராட்டிய அத்தனை பேருக்கும்,  ஒருவேளை நன்றி தெரிவிக்க மறந்த  அனைவருக்கும் நான் இந்த நேரத்திலே நன்றி  சொல்ல விரும்புகிறேன்.

Related Stories: