ஊரடங்கால் வருவாயின்றி தவித்த பால் வியாபாரி மனைவியுடன் தற்கொலை: நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினர்

சென்னை: மந்தைவெளி சிவராமன் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (55), பால் வியாபாரி. இவரது மனைவி சாந்தி (48). இருவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தை கிடையாது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் நாய் ஒன்று குழந்தை போல் வளர்த்து வந்தனர். சொந்த வீட்டில் வசித்து வந்த லோகநாதன், மாத ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் லோகநாதனுக்கு போதிய வருமானம் இல்லாமல் இருந்து வந்துள்ளர்.

இந்நிலையில், லோகநாதன் வீடு நேற்று முன்தினம் வெகு நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. ஆனால் வீட்டின் உள்ளே இருந்து நாய் மட்டும் கத்தும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், லோகநாதன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.  அப்போது தம்பதி இருவரும் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் வளர்த்த நாய் முகத்தில் பிளாஸ்டிக் பேப்பர் கட்டப்பட்ட நிலையில் கத்திக்கொண்டிருந்தது. உடனே போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வளர்த்து வந்த நாயை மீட்டு உணவு அளித்து விலங்குகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், லோகநாதன் தற்கொலை செய்தவற்கு முன்பு, வெளியூரில் உள்ள தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுவதுடன், கடன் தொல்லை அதிகரித்துள்ளதால் வாழ்வதற்கு பிடிக்காமல் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்கிறேன். எங்கள் உடலை ஒரே குழிக்குள் புதைத்துவிடுங்கள். நாங்கள் வாழ்ந்த வீட்டை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை, கடன் கொடுத்த நபர்களுக்கு கொடுத்து விடுங்கள் என, கடன் கொடுத்தவர்களின் பட்டியலுடன் தகவல் அனுப்பி உள்ளார். என்பது தெரியவந்தது.

மேலும், லோகநாதனிடம் மாதச்சீட்டு கட்டியவர்கள் சீட்டு முடிவடைந்ததும் பணத்தை திரும்ப கேட்டள்ளனர். ஆனால் போதிய வருமான இல்லாததால் பணம் கட்டியவர்களுக்கு திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் பணம் கட்டியவர்கள் தினமும் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன வருத்ததால் லோகநாதன் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முன்பு லோகநாதன் தம்பதி குழந்தை போல் வளர்த்து வந்த நாயை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரால் நாயின் முகத்தை இறுக்கமாக கட்டிவிட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் நாய், பிளாஸ்டிக் பேப்பரை கிழித்து உதவி கேட்டு சத்தம் போட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் தனியாக வசித்து வந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மந்தைவெளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: