ஊரடங்கில் தளர்வு எதிரொலி மின்சார ரயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்கலாம்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் 500 அபராதம்

சென்னை: ஊரடங்கில் தளர்வு காரணமாக  இன்று முதல் மின்சார ரயிலில் பொதுமக்களும் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு தளர்வு தொடர்பாக கடந்த 20ம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, மின்சார ரயிலில் கீழ்க்கண்ட வகையை சேர்ந்த பயணிகள் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், உயர் நீதிமன்றம் மற்றும் மற்ற நீதிமன்ற ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மற்ற துறைகளை சேர்ந்த ஊழியர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதம் அல்லது அடையாள அட்டையுடன் பயணிக்கலாம்.

மேலும் இவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், மின்சார ரயில் பயணம் செய்யலாம். இவர்களுக்கு ‘சிங்கிள் டிக்கெட், ரிட்டன் டிக்கெட், சீசன் டிக்கெட்கள் வழங்கப்படும். அதேப்போல், வெளியூர்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ரயில் நிலையங்கள் வந்து, அங்கிருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், மின்சார ரயிலில் பயணிக்கலாம். அவர்கள் தாங்கள் வைத்திருக்கும்  முன்பதிவு ரயில் டிக்கெட்டை காண்பித்து, கவுன்டர்களில் சிங்கிள் டிக்கெட் களை வாங்கிக் கொள்ளலாம். இவர்களும் மின்சார ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம்.

அதேப்போல் பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் மின்சார ரயிலில் பயணிக்கலாம். அவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது.

மேலும் அவர்களுக்கு சிங்கிள் டிக்கெட், ரிட்டன் டிக்கெட், சீசன் டிக்கெட்கள் வழங்கப்படும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெண் பயணிகள் தங்களோடு அழைத்து செல்லலாம்.  ஆனால் ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத சாதாரண நேரத்தில், அதாவது காலை 7 மணிக்கு முன்பு வரையிலும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், இரவு 7 மணிக்கு பிறகு மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.  மேலும் அண்களுக்கு ‘சிங்கிள்’ டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். ‘ரிட்டன்’ டிக்கெட் வழங்கப்படாது. மேலே குறிப்பிட்டுள்ள 1 மற்றும் 2வது வகையில் உள்ள ஆண்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.

மேலும் மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணியாமல், உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ரயில்வே ஊழியர்களால் எந்த நேரத்திலும், பயணிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அப்போது பயணிகள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் 630ஆக அதிகரிப்பு

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் ஊரடங்கு தளர்வு காரணமாக மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி இடையே 123 ரயில்களும், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி-மூர்மார்க்கெட் மார்க்கத்தில் 126 மின்சார ரயில்களும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 42 ரயில்களும், சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் இடையே 42 ரயில்களும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 33 ரயில்களும், வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே 32 ரயில்களும், சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 116 ரயில்களும், மறு மார்க்கமாக திருமால்பூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை இடையே 116 ரயில்களும் என மொத்தம் 630 ரயில்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும். ஞாயிறுகிழமைகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

Related Stories: