ஆட்சிக்கு வந்து 40 நாள் கூட ஆகவில்லை காவிரியை பிடி.. கங்கையை பிடி.. என்றால் எப்படி மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்

துரைமுருகன்- எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்

சென்னை:  தமிழக சட்டப் பேரவையில்எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் உரையாற்றும் போது,நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணிகளை தொடங்கி விட்டோம். நாங்கள் அலட்சியமாக நடக்கவில்லை. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமை செயலாளரிடமும், சுகாதாரத்துறை செயலாளரிடமும் கொரோனா தடுப்பு பணி நிலவரத்தை கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். பேரவையில் அப்போது பேசியதாக சிலவற்றை முதல்வர் குறிப்பிட்டு பேசினார். அதை நான் திரும்பவும் கேட்டு பார்த்தேன். அப்படி எந்த செய்தியும் நான் சொல்லவில்லை. பாதுகாப்பாக இருப்போம் என்று தான் குறிப்பிட்டேன். மாஸ்க் அணிய வேண்டாம் என்று கூறியது தவறானது.

  முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்கட்சி தலைவர் நேற்று பேசும் போது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த நிலையை விளக்கி கூறினார். தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பினோம். அந்த கடிதத்துக்கு கூட தலைமை செயலாளருக்கு தான் பதில் வந்ததையும் விளக்கி சொன்னார். அதாவது, 26.02.2021 முதல் தேர்தல் விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு பிறகு 09.04.2021 அதாவது இரண்டு மாதம் கழித்து 40 நாட்களுக்கு பிறகு தான் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசின் சார்பில் தலைமை செயலாளர் கடிதம் எழுதுகிறார். நீங்கள் கடிதம் அனுப்பிய அடுத்த நாளே தேர்தல் ஆணையத்திடம் இருந்து பணிகளை நடத்தலாம் என்று கடிதம் வந்துவிட்டது. அதற்காக தான் இந்த விளக்கத்தை சொன்னேன். குற்றச்சாட்டு சொல்ல அல்ல.   

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: அதை தான் நானும் சொன்னேன். தேர்தல் ஆணையத்திடம் தகவல் சொல்லிவிட்டு, அவர்கள் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை என்று அந்த பணிகளை உடனடியாக தொடங்கிவிட்டோம். அதுமட்டுமல்ல, திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து அறிவிப்புகளையும் கவர்னர் உரையில் ஏன் சொல்லவில்லை என்று நாங்கள் கேட்கவில்லை.  சில முக்கிய அறிவிப்புகளை ஏன் வெளியிடவில்லை என்று தான் சொன்னோம். ேகாதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு ஒரு முக்கிய பிரச்னையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு மிக முக்கியமானது. நீங்களே தமிழகம் நீர்பற்றாக்குறை மாநிலம் என்று கவர்னர் உரையில் சொல்லியிருக்கிறீர்கள். அதை சுட்டிகாட்டி தான் பேசினோம்.

 அவை முன்னவர் துரைமுருகன்: நாங்கள் வந்து 40 நாள் கூட ஆகவில்லை. அதற்குள் காவிரியை பிடி, கங்கையை பிடி என்றால் எப்படி பிடிக்க முடியும். நாங்கள் கிருஷ்ணா நீர் கொடுத்தோம். நிச்சயமாக கோதாவரி-காவிரியை இணைத்து காட்டுவோம். நாங்க செய்த விஷயங்களை நீங்கள் செய்யாமல் விட்டு விட்டீர்களே. உள்நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க முடியாமல் விட்டு விட்டு சென்ற நீங்கள் மாநிலத்திற்குள்ள நதிகளை ஏன் இணைக்கவில்லை என்று கேட்கிறீர்களே.  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நீங்கள் திட்டத்தை அறிவித்தீர்கள். ஆனால் அதற்கு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து கொடுத்திருந்தால் வேகமாக, துரிதமாக முடித்திருப்போம். தாமிரபரணி-கருமேனி-நம்பியாறு திட்டத்தை சொல்லி விட்டு போய் விட்டீர்கள்; நிலத்தை ஆர்ஜிதம் செய்ய முடியவில்லையே.

எந்த திட்டமும் முடங்கவில்லை, நடந்து கொண்டு இருக்கிறது. நிலத்தை கையப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது, கோதாவாரி-காவிரி இணைப்பு மிக முக்கியமான திட்டம். இது ஏன் கவர்னர் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது தான் என் கேள்வி. இதை நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் உங்கள் அரசின் விருப்பம்.  அவை முன்னவர் துரைமுருகன்: நிலம் கையகப்படுத்தாமல் நாங்கள் போய் விட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். 10 ஆண்டுகள் நீங்கள் தானே ஆட்சியில் இருந்தீர்கள். நீங்கள் இடத்தை கையகப்படுத்தி எங்களிடம் கொடுத்து இருக்கிறீர்களா?. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் நிலத்தை ஏன் கையப்படுத்தவில்லை. சின்ன, சின்ன தாமதங்கள் ஏற்பட்டு இருக்கிறது. எங்களுடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.  இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: