ஏய்யா... சும்மா பீதிய கிளப்பி மக்களை சாகடிக்கிறீங்க கருப்பு, மஞ்சள், பச்சை பூஞ்சை உண்மையாகவே இருக்கிறதா...? தெலங்கானா முதல்வர் ஆவேசம்

திருமலை: ‘நோய் பயத்திலேயே பலர் இறக்கும் நிலையில் கொரோனா வைரஸ், பூஞ்சை நோய்கள் தொடர்பான தகவல்களை மிகைப்படுத்துவதா?’ என்று முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசமாக பேசினார்.  தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள வசலமர்ரி கிராமத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் தத்தெடுத்துள்ளார். இங்கு நடந்த வளர்ச்சி பணிகள் ெதாடக்க விழாவில் அவர் பேசியதாவது:  கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, பச்சை பூஞ்சை என விதவிதமான நிறங்களில் பூஞ்சை நோய் வருவதாக கூறுகின்றனர். உண்மையில் அது உள்ளதா? இல்லையா? என்பது கூட முழுமையாக தெரியவில்லை. இதுபோன்ற தகவல்கள் வேகமாக பரவ விடுகிறார்கள். இதனால், நோய் பயத்திலேயே பலர் இறக்கின்றனர். மன தைரியமிக்கவர்களுக்கு கூட, இதுபோன்ற தகவல்களை கேட்கும்போது பயத்திலேயே இறந்து விடுகின்றனர்.

கொரோனா எனக்கும் வந்தது. அப்போது மருத்துவரிடம் என்ன சிகிச்சை? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் கொரோனாவுக்கு மருந்து, மாத்திரையே கிடையாது. அதிக காய்ச்சல் வரும்போது டோலோ 650, ஆன்டிபயோடிக் மற்றும் வாரத்தில் ஒருநாள் விட்டமின் ‘‘பி’’ மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் போதும் என்றார்கள். அதன்படி மாத்திரைகளை சாப்பிட்ட எனக்கு கொரோனா தொற்று நீங்கியது.  கொரோனாவை வராமல் தடுக்க அல்லது வந்துவிட்டால் குணப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் தெரிவித்தால் போதும். அதை விட்டுவிட்டு புதிது புதிதாக நோய் வருவதாகவும், அதற்கு நிறையபேர் இறந்து விட்டதாகவும் கூறி மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது.

கொரோனா தாக்கினால் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும் என பீதியை கிளப்பியதால்தான், தொற்று இல்லாதவர்கள் கூட ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒன்றுக்கு இரண்டாக வீட்டுக்கு வாங்கிச் சென்றார்கள். இதனால், உண்மையில் உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, கொரோனா, பூஞ்சை தொடர்பான தகவல்களை மிகைப்படுத்தி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>