ஒன்றிய அரசின் சிறு துறைமுகங்களுக்கான திருத்திய மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் சிறு துறைமுகங்களுக்கான திருத்திய மசோதாவிற்கு தமிழக அரசின் எதிர்ப்பை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரங்கள் துறைக்கான ஒன்றிய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கடல் சார் மேம்பாட்டு கூட்டத்தை  இணையதளம் மூலமாக நடத்தி துறைமுகங்களுக்கான திருத்திய வரைவு மசோதா தொடர்பான விவாதங்களை மேற்கொண்டார். தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  கடலூர் மற்றும் கன்னியாகுமரி துறைமுகங்களில் சாகர்மாலா / உள்நாட்டு தோணித்துறை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு மேம்பாட்டு பணிகளையும், நிதி ஆதாரத்தையும் வழங்கியதற்கு நன்றி.

சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். வ.உ.சி. துறைமுகத்தை சரக்கு மாற்று முனையாமாக மாற்றுவதற்கு விரிவாக்கம் செய்ய மிகப்பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விரைந்து செயல்படுத்திட வேண்டும். திருத்திய வரைவு இந்திய துறைமுக சட்டம் 2021 மாநில அரசின் குறிப்பு வேண்டி கடந்த 14ம் தேதிதான்  பெறப்பட்டது. மிகக்குறைவான நேரமே இருப்பதால் இந்திய துறைமுக சட்ட வரைவு 2021 நீண்ட கால கொள்கை முடிவுகளை உள்ளடக்கிய மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகும். 1908ம் வருடத்திய இந்திய துறைமுகங்கள் சட்டப்படி, துறைமுகங்கள் திட்டமிடுதல், மேம்படுத்துதல் வரையரையப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் மாநில அரசிடம் உள்ளது. எனினும், இந்த வரைவு மேற்கண்ட அதிகாரங்களை மாநில அரசிடம் இருந்து பறித்திடும் வகையில் உள்ளது.

கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம் தற்போது ஆலோசனை அமைப்பாக உள்ளது. இவ்வரைவின் விதிகளின்படி இக்குழுமம் சிறு துறைமுகங்களை ஒழுங்குமுறை செய்யும் அமைப்பாக செயல்பட உள்ளது. மேலும், இந்த குழுமத்தின் கட்டமைப்பு ஒன்றிய அரசின் அதிகாரிகளை மட்டும் உள்ளடக்கியதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரங்கள் தற்போது மாநில அரசிடம் உள்ளது. இந்த வரைவின்படி பல அம்சங்களில் விதிகளை உருவாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் செல்ல உள்ளது. இதன்மூலம் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.

மாநில கடல்சார் வாரியத்தின் ஆணைகள் மீதான மேல்முறையீடு தொடர்பான அதிகாரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளது. ஆயினும், வரைவின்படி பெருந்துறைமுகங்களுக்காக ஒன்றிய அரசால் உருவாக்கப்பட உள்ள மேல்முறையீட்டு தீர்பாணையத்திடம் இந்த அதிகாரங்கள் செல்லக்கூடிய நிலை உள்ளது. இவ்வரைவில் மாநில அரசின் கவனத்திற்குரிய மேல் சில பகுதிகளின் மீது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாநில அரசின் குறிப்புரைகள் அனுப்பி வைக்கப்படும்.

Related Stories: