சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கத்தில்’ நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பொருள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நடத்தப்படாமல் இருந்த ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையின் போதும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவும் முழு வீச்சில் தயாராக தொடங்கியுள்ளது.

அதன் ஒரு கட்டமாக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திக்க வேண்டும், திமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது?. தேர்தல் பிரசாரம் எந்த வகையில் இருக்க வேண்டும்? யாரை வேட்பாளராக நிறுத்தலாம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: