தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் இது டிரெய்லர்தான் முழுப்படம் விரைவில்: சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்  என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாத கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இறுதி நாளான நேற்றும் ஆளுநர் உரை மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது : கடந்த 2 நாட்களாக இந்த அவையிலே நடந்திருக்கக்கூடிய விவாதத்திலே, திமுக, அதிமுக, இந்திய தேசிய காங்கிரஸ், பாமக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த 22 உறுப்பினர்கள், ஆளுநர் உரையின் மீது, தங்களுடைய சீரிய கருத்துகளை மையப்படுத்தி இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். உரையாற்றிய உங்கள் அனைவரது கருத்துகளையும் இந்த அரசுக்கு நீங்கள் சொல்லும் ஆரோக்கியமான ஆலோசனைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

அரசின் திட்டங்கள், கொள்கைகள், கோரிக்கைகள் ஆகிய அனைத்தையும் ஆளுநர் உரையில் மட்டுமே முழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை என்பது, அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில் அரசாங்கத்தின் ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான். அனைவருக்கும் எளிதில் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், இது ஒரு ‘ட்ரெய்லர்’ மாதிரி. முழு நீளத் திரைப்படத்தை விரைவில் வெள்ளித்திரையில் காண்க என்று முன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்ததைப்போல, இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ள உள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கிற இடர்ப்பாடுகள், அந்த இடர்ப்பாடுகளைக் களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்கள் அவற்றைச் சந்திப்பதற்கான சாதுரியங்கள் என அனைத்தும் விரைவில் இந்தப் பேரவையிலே வைக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் விரிவாக இடம்பெறும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி. நாங்கள் 10 ஆண்டுகள் பொறுத்திருந்தோம். இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். அதில் உங்களுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வேண்டாம். தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் எதையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்து இன்றோடு 49 நாட்கள் தான் ஆகி இருக்கின்றன. ஆனாலும், என் மீதும், திமுக அரசின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக, இப்போதே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கலாமே என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முதலில் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.  

தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.  பல்வேறு ஊடகங்களில் திமுக அரசினுடைய முதல் முப்பது நாட்கள் எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டு, அதற்கு பொது மக்கள் அளித்த பதில்களை அனைவரும் பார்த்திருப்பீர்கள். திமுகவுக்கு வாக்களிக்கவில்லையே என்று பலரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  எங்களுக்கு வாக்களித்தவர்கள், இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலும், வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய வகையிலும், எனது பணி இருக்கும் என்று கலைஞருடைய நினைவிடத்தில் தி.மு.க. வெற்றி பெற்றவுடன் ஊடகங்கள் வாயிலாக நான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்தேன். அந்த வகையில் நம்முடைய பணிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது. இன்னும் சிறப்பாகச் செயல்பட உத்வேகம் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

கலைஞரின் தொடர்ச்சி நான் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி, 1920ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை சுமார் 17 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூக நீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தைத் தகர்த்து, மகளிருக்கான உரிமைகளை அங்கீகாரம் செய்து, அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தந்து, கல்வித் துறையில் சீர்திருத்தங்களைப் புகுத்தி, சமுதாய மாற்றங்களுக்கான விதைகளை விதைத்து, சமூக நீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி. ஆங்கிலேயரின் இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்ட அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்குத் திட்டங்களையும் அக்காலத்தில் எவரும் சிந்தித்திராத சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிய கட்சி. திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டது.

அன்றைக்கு இருந்த மிகக் குறைவான அதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி. பட்டியலின மக்களது நலனைப் பேணியது நீதிக் கட்சி. திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி. அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும் போட்ட சமூகநீதி சமத்துவ சமுதாயம் காணும் அடித்தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றைய தி.மு.க. ஆட்சி. 1967ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் முதன்முதலாக திமுக அமர்ந்தபோது, ‘நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இந்த ஆட்சி’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதேவழியில், எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான் என்பதைப் பெருமையோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர். முத்தமிழறிஞர்  கலைஞரின் தொடர்ச்சி நான் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார் ஸ்டாலின்.

Related Stories: