சிஏஏ, வேளாண் சட்டம், 8 வழி சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்: சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

சென்னை: கடந்த ஆட்சியில் கருத்து  சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், சிஏஏ, வேளாண் சட்டம், சேலம் எட்டு வழி சாலை, கூடங்குளம் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட  வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் - நியூட்ரினோ - கூடங்குளம் அணு உலை மற்றும் சேலம் எட்டுவழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

நம் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பு  கிடைப்பதே அவர்களின் முன்னேற்றத்திற்கும் நம் தமிழ் சமுதாயத்தின்  வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த  நோக்கத்தோடுதான் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களில் அதிக  வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்போம் என்று  அறிவித்திருக்கிறோம். இதன் முதற்கட்டமாக, செய்யாறில் 12,000 பேருக்கும்,  திண்டிவனத்தில் 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பெரும்  தொழிற்சாலைகள் அமையவுள்ளன. தந்தை பெரியார் பெயரால் 240 சமத்துவபுரங்களை கட்டினார் கலைஞர். அந்த சமத்துவபுரங்கள் சரியாக பராமரிக்கப்படாத அவல நிலையில் இருக்கின்றன. அந்த சமத்துவபுரங்கள் உடனடியாக சீரமைக்கப்படும். மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.

இந்த நிதியாண்டில் ரூ.100 கோடி செலவில் திருக்கோயில்களைத் தொன்மை மாறாமல் புதுப்பிக்க, திருக்குளங்களைச் சீரமைத்திட, திருத்தேர்களைப் புதுப்பித்து திருவிழாக்கள் நடத்திட தேவையான பணிகள் 100 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும்.  ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை என்பதைப் போல எதிர்க்கட்சி பேசுவது, உண்மையான நிலை என்று ஆகிவிடாது. மக்களும் அப்படிக் கருதிவிட மாட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு, அதிகாரிகளிடையே நான் பேசும் போது முதல் கூட்டத்திலே நான் சொன்னேன். எனக்குப் புகழுரை வேண்டாம். உண்மைகளைச் சொல்லுங்கள் என்றுதான் வலியுறுத்தி இருக்கிறேன். புகழுக்கு மயங்கவும் மாட்டேன். குறைகூறுவதால் குன்றிவிடவும் மாட்டேன். ஏனென்றால் இரண்டையுமே அதிகளவு எனது வாழ்க்கையில் நான் பார்த்துவிட்டேன்.

ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், அந்தப் பகட்டோடு நான் என்றைக்கும் நடந்துகொண்டது கிடையாது. அந்தத் தலைவருக்கு கடைசித் தொண்டனாகத்தான் நான் நடந்து கொண்டேன்.  இது எனது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும். அந்தத் தலைவருக்கும் தெரியும்.

ஆறாவது முறையாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்திடும் வகையில், எப்படி நானும், அமைச்சர் பெருமக்களும் ஓயாது, ஓடியாடிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோமோ, இதையெல்லாம் இந்த நாடறியும், நல்லவர்கள் அறிவார்கள்.

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி முதல் ‘இந்து’ என். ராம் வரை, பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு, ஒன்றிய அரசின் முன்னாள் நிதி அமைச்சரும் பொருளியல் சிந்தனையாளருமான ப. சிதம்பரம் தொடங்கி, நடுநிலை நாளேடுகள் மற்றும் இதழ்கள் வரை, திமுக அரசு குறுகிய காலத்தில் நிகழ்த்தியிருக்கக்கூடிய இந்தச் சாதனைகளை வரவேற்றுப் பாராட்டி இருக்கிறார்கள். திமுக அரசின் சாதனைகளுக்கு அவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் மனமுவந்து வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னுடைய நன்றிக்குரியவர்கள். மக்களுக்குப் பணியாற்ற வேண்டியது ஒரு அரசினுடைய கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இந்த மாமன்றத்தில் கூடியிருக்கின்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

42 நிமிடங்கள் முதல்வர் பதிலுரை

சட்டப்பேரவையின் இறுதி நாளான நேற்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். சரியாக அவர் காலை 10.04 மணிக்கு தனது பதிலுரையை அவர் தொடங்கினார். தொடர்ந்து அவர் தனது பதிலுரையை காலை 10.46 மணிக்கு ஆற்றி முடித்தார். சுமார் 42 நிமிடங்கள் தனது பதிலுரையை அவர் ஆற்றினார். மு.க.ஸ்டாலின் பேசி முடித்ததும் எம்எல்ஏக்கள் அனைவரும் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: