விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த காவுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 2011 முதல் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 2017-18ல் மட்டும் வழங்கப்படவில்லை. இதனால் அப்போது அவர்களால் நீட் தேர்வுக்கு தயாராக முடியவில்லை.  எனவே, 2017-18ல் படித்த அனைவருக்கும் இலவச லேப்டாப் வழங்க உத்தரவிட ேவண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘ஏற்கனவே விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைவருக்கும் அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாணவர்களின் படிப்பிற்கு லேப்டாப் மிகவும் அவசியம். எனவே, விடுபட்டோருக்கு இலவச லேப்டாப் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories:

>