சென்னை மதன்போல சேலத்திலும் யூ டியூப் சேனல் நடத்திய வாலிபர் கைது: பெண்களை இழிவுபடுத்திய பதிவுகள் நீக்கம்

சேலம்:  தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விபிஎன் சர்வர் மூலம் லைவ் ஸ்டிரீமில் கொண்டுவந்து, அதில் பங்கேற்ற பெண்கள் குறித்து ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசிவந்த புகாரின் பேரில் மதன் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் சென்னை கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் சேலத்தில் யூ டியூப் நடத்தி வந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல்(27) என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ‘‘மிஸ்டர் நம்பர் ஒன் டுபாக்கூர்’’  என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வந்துள்ளார். இவரது நண்பர் அரிசிப்பாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (26). இவர் மனைவியுடன் சேர்ந்து பிராங் வீடியோ நடத்தி வருகிறார்.இதற்கிடையில் வசந்தகுமாரின் மனைவியை பற்றி சக்திவேல் தவறாக நண்பர்களிடம் கூறிவந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி புகாரின்படி பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனை தெரிந்து கொண்ட சக்திவேல், மனைவி மூலமாக என் மீது புகார் கொடுக்கிறாயா? என கேட்டு வசந்தகுமாரை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சக்திவேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரின் விசாரணையில், சக்திவேல் நடத்தி வந்த ‘‘மிஸ்டர் நம்பர் ஒன் டுபாக்கூர்’’ சேனலில் பெண்களிடம் ஆபாசமாக  பேசி வெளியிட்டது தெரியவந்தது. மேலும் அவரை 2.20 லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர். இதன் மூலம் மாதம் 4 லட்சம் வரை அவர் சம்பாதித்துள்ளார். மதன் போல தன் மீதும் புகார் வந்துவிடுமோ என்ற பீதியில் தனது சேனலில் பெண்கள் தொடர்பான அனைத்து பதிவுகளையும் அவர் நீக்கியுள்ளார். இவ்வாறு 70க்கும் மேலான பதிவுகளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட சக்திவேல் நடத்தி வந்த யூ டியூப் சேனலில் பெண்களை இழிவுபடுத்தி பதிவிட்ட பதிவுகளை அழித்துள்ளார். இதன்மூலம் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் போலீசில் புகார் கொடுக்கலாம். வந்தகுமாரின் மனைவி கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.

Related Stories: