முதல்வர் ஏற்படுத்திய விழிப்புணர்வினால் தமிழகத்தில் காட்டூர் கிராமத்தில் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: முதல்வர் ஏற்படுத்திய விழிப்புணர்வினால், தமிழகத்தில் பொதுமக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள  மிகப்பெரிய அளவில் ஆர்வம் பெருகி உள்ளது. அதன்படி காட்டூர் கிராமத்தில் 100%  தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தமிழகத்தின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. தினமும் 2 முதல் 3 லட்சம் அளவில் தடுப்பூசி போடப்படுகிறது. அந்தவகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சுற்றுலா தளங்கள் போன்ற முக்கிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படுகிறது.

ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் இறுதிக்குள் நீலகிரியில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும்.  திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் தீவிர முயற்சியினால், அந்த தொகுதிக்குட்பட்ட காட்டூர் கிராமத்தில், தமிழகத்துக்கு முன்மாதிரியாக 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.ஏற்கனவே காஷ்மீரில் உள்ள பந்திப்பூரா மாவட்டத்தில் உள்ள வேகான் கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்கடுத்தப்படியாக தமிழகத்தில் காட்டூர் கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அல்லாமல் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்படி இதுவரை 423 பேருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அனுமதிக்கபட்ட தொகை ₹1 கோடியே 27 லட்சம் ஆகும்.அந்தவகையில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தேவைப்பட்டால், வீட்டு வாசலிலே சென்று பரிசோதனை செய்ய கூடிய நிலை உருவாகும். ஒரே பகுதியில் 2 பேருக்கு மேல் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.

டெல்டா பிளஸ் குறித்து அச்சம் வேண்டாம் பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்தார்

சென்னையில் செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை அளித்து குணமடைந்து தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் இருக்கிறார்களா என்று சோதனை செய்து வருகிறோம். இந்த தொற்று வீரியமிக்கது என்றாலும் தொடர் சிகிச்சை அளித்து அதனை குணப்படுத்தலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: