மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் முதல்வராக பதவியேற்றபோது, தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் அதிகளவில் இருந்தது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டார். இதன்மூலம் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திலும், தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்ல பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஆலோசனை நடத்த தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் தமிழகத்தில் தொடங்க முன்னுரிமை அளிப்பதுடன், அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோன்று, தமிழக அரசு ஜூலை மாதம் 2021-2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்தும், நடந்து முடிந்த ஆளுநர் உரையில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை, கடந்த திங்கள் (21ம் தேதி) காலை 10 மணிக்கு கூடியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் அன்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மூன்று நாட்கள் விவாதம் நடைபெற்றது. நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினாா். நேற்று மதியம் 11.51 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Related Stories:

>