அதிமுக ஆட்சியில் நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோமே? கொரோனா 3வது அலை வந்தாலும் எதிர்கொள்வோம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: அதிமுக ஆட்சியில் கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதனைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தி திமுக அரசுக்கு இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் உரை மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:  கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது. வந்தாலும், அதனைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தி இன்றைய அரசுக்கு இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகத்தான் தொற்று குறைந்தது.  ஆனால், எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் ஆட்சியிலே அதிகபட்சமாக 7000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.  

பிப்ரவரி மாதம் 26ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை வைத்து இப்படிச் சொல்கிறார்.  மே 6ம் தேதி வரைக்கும் முதல்வராக இருந்தது அவர் தான்.   தமிழ்நாட்டில் பாதிப்பு 10,941.  26.4.2021 அன்று அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு அன்றைய முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். அன்றையதினம் தமிழ்நாட்டில் பாதிப்பு 15,659 ஆகிவிட்டது.  28.4.2021 தடுப்பூசி கொள்முதல் குறித்து அன்றைய முதல்வரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பு சொல்கிறது. அன்றைய பாதிப்பு 16,665.  இதுதான் உண்மையான நிலைமை.

அதாவது, ஏப்ரல் மாதத்தில் முழுமையாக அன்றைய முதல்வர் மேற்பார்வையில் தான் பணிகள் நடந்துள்ளன. ஆனால் கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.  மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

அன்றையதினம் ஏற்பட்ட பாதிப்பு 19,588.  இவை அனைத்துக்கும் முந்தைய அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.  மார்ச் 6ம் தேதியில் இருந்தே தமிழ்நாட்டில் கொரோனா ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.  மார்ச் 30ம் தேதியே தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது என்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு கல்வித் துறைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏப்ரல் 6 முதல் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது.  பாதிப்பு எண்ணிக்கை 5000-த்தில் இருந்து 19 ஆயிரம் ஆக ஆனது.  எனவே, கொரோனாவை அதிமுக அரசு கட்டுப்படுத்திவிட்டது என்ற வாதம் மிகமிகத் தவறானது. அவரை யாராவது கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்று கையை கட்டி போட்டு வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்று ஒரு திரைப்படம் வந்தது.

அதைப்போல பிப்ரவரி 26 முதல் மே 6 வரையிலான இரண்டு மாத ஆட்சியை அதிமுக மறந்து விட்டதா என்று நான் கேட்க விரும்புகிறேன். ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்ததும் அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரம் எனக் கூடியது. இத்தகைய மோசமான சூழலைக் கட்டுப்படுத்தியதுதான் திமுக அரசின் மகத்தான சாதனை என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கொரோனா வந்தபோது அதுபற்றி எதுவும் தெரியவில்லை, மருத்துவர்களுக்கே தெரியவில்லை, மருந்தும் இல்லை, தடுப்பூசியும் இல்லை என்று இப்போதிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்.  அந்தக் குழப்பமான சூழலில்தான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டச் சொன்னேன்.  பலமுறை நான் சொன்னேன். ஸ்டாலின் என்ன டாக்டரா? என்று இப்போதிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார். நான் உள்ளபடியே கோபப்படவில்லை.   

உண்மை என்னவென்றால், கொரோனாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அனைத்து பொது மக்களும் டாக்டர் ஆகிவிட்டார்கள்.  அதுதான் உண்மை.  எல்லோருமே பாதி டாக்டராகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனிமேல் நாம் யாருமே, யாரையுமே நீங்கள் டாக்டரா என்று கேட்க முடியாது. அந்த அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. இது அரசியல் பிரச்னை அல்ல. கட்சிப் பிரச்னையும் அல்ல. ஆட்சியின் பிரச்னையும் அல்ல. மக்கள் பிரச்னை. மக்கள் நலன் சார்ந்திருக்கக்கூடிய பிரச்னை. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, ‘நான் தவறாகச் சொல்லவில்லை, அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்’ என்று சொன்னார். அதற்காக அவருக்கு நான் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  அனைவரும் சேர்ந்து செயல்பட்டு-அனைத்து தரப்பினரது ஆலோசனையையும் பெற்று கொரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளியை இந்த அரசு வைக்கும் என்று நான் உறுதிபட இந்த அவையிலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

‘போர்க்கால நடவடிக்கை எடுத்தோம்’

திமுக ஆட்சிக்கு வந்த நொடியிலிருந்தே கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டது என்று மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். அவர் கூறியதாவது : முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டவுடன், தலைமைச் செயலகத்திற்குச் சென்று நான்  பொறுப்பேற்றேன். பொறுப்பேற்றவுடனே, கொரோனா நிவாரண நிதியாக ₹4000 வழங்க  உத்தரவிட்டேன். முதல் தவணையான ₹2000 மே மாதத்திலேயே வழங்கப்பட்டது. கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மேலும் 2000 வழங்கப்பட்டது.  மொத்தம் ₹8,393 கோடி செலவில் 2 கோடியே 11 லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்திருக்கின்றன. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ₹3 குறைத்துள்ளோம். அது கடந்த மே 16ம் தேதி முதலே செயல்பாட்டுக்கு வந்தது.அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டோம்.

திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டது. என்னிடம் தரப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்த்து வைக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தைத் தொடங்கினேன். இன்று வரை, இன்றைக்குக் காலையிலே(நேற்று காலை) வரை-ஆதாரத்தோடு புள்ளி விவரங்களோடு  சொல்ல வேண்டுமென்று சொன்னால், 75 ஆயிரத்து 546 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் கொரோனா  நோயாளிகளுக்கான கட்டணத்தை முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் அரசே செலுத்த உத்தரவிட்டோம். இதனால் 20 ஆயிரத்து 520 பேர் பயனடைந்துள்ளனர். கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கக்கூடிய 330 பேருக்கு 77 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.  

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்கப்பட்டது. தடுப்பூசிதான்  உயிர்க்கவசம் என்பதால், தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாகவே மாற்றப்பட்டது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து 47 நாட்களில் 65 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையைவிட இது இருமடங்கு அதிகமாகும். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது  கொரோனா உச்சத்தில் இருந்தது. மே 7ம் நாள், தமிழ்நாட்டில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை நாளொன்றுக்கு 26 ஆயிரமாக இருந்தது. அது 36 ஆயிரமாக உயர்ந்து கொண்டு இருந்தது. மருத்துவ வல்லுநர்களை விசாரித்தபோது, ‘இது 50 ஆயிரம் ஆகும்-ஏன், அதைவிட தாண்டிக்கூட போகும்’ என்றெல்லாம் சொன்னார்கள். தொடக்கத்தில் கடும் சவாலாகத் தெரிந்தது. ஆனால் அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, அப்படியே படிப்படியாகக் குறைந்து 7000க்கும் கீழ் வந்துவிட்டது.

Related Stories: