மதுரை எய்ம்ஸ் அருகே ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை: தென்னக ரயில்வே தகவல்

மதுரை: மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடம் அருகே ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை செய்வதாக தென்னக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மொத்தம் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டன. இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் அறிவிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கிவிட்டன. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கி தற்காலிக கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஆனால் நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போதுதான் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் கட்டுவதற்கு ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 750 படுக்கைகளுடன் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் 100 எம்பிபிஎஸ் 60 செவிலியர் இடங்களுடன் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மிகப்பிரமாண்ட உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் , செவிலியர், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிவார்கள். அவர்களுக்கான தங்கும் குடியிருப்புகள், கட்டப்படும். தினமும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவ வல்லுநர்கள், அதிகாரிகள் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்வார்கள். அதுபோல், மருத்துவம் பார்ப்பதற்கு கன்னியாகுமரி முதல் திருச்சி வரையிலான மக்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வர வாய்ப்புள்ளது.

குறிப்பாக மதுரை - செங்கோட்டை, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி, திண்டுக்கல், காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள மக்கள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர் என ஆயிரக்கணக்கான மக்கள் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவார்கள். எய்ம்ஸ் அமைய இருக்கும் தோப்பூரில் இருந்து 4.5 கி.மீ., தொலைவில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு பெரும்பாலான விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் நின்று செல்கின்றன.

ஆனால் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிக அருகில் 2 கி.மீ.,தொலைவில் செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அருகே ரயில் நிலையம் அமைக்க தென்னக ரயில்வே பரிசீலிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Related Stories:

>