சார்ஸ், மெர்ஸ், சார்ஸ்-கோவ் -2 வைரஸ் என்று தாக்கினாலும் கொரோனா குடும்பத்தையே அழிக்கும் ‘சூப்பர்வேக்சின்’: அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: கொரோனா குடும்பத்தின் சார்ஸ், மெர்ஸ், சார்ஸ்-கோவ் - 2 என்று எந்தவகை உருமாறிய வைரசையும் ஒழிக்கும் ‘சூப்பர்வேக்சின்’ என்ற புதிய தடுப்பூசியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளைப் புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரசின் முதல் அலை, 2ம் அலை எல்லாம் கடந்து தற்போது 3வது அலையை நோக்கி மக்கள் பயணித்துக் கொண்டுள்ளனர். சீனாவின் வூஹான் வைராலஜி மையத்தில் இருந்து கொரோனா பரவியிருக்கும் என்று உலகமே சொன்னாலும், சீனா அதனை மறுத்து வருகிறது. கொரோனா வகைகள் குறித்து ஜெர்னல் செல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், ‘வவ்வால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை அடையாளம் கண்டுள்ளோம். அதில் நான்கு கொரோனா வகைகள் தற்போது பரவும் கோவிட் 19 வைரசுக்கு ஒத்துள்ளது. கடந்த 2019 மே மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரை சீனாவின் காடுகளில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வவ்வால்களின் கழிவு மற்றும் வாயிலிருந்து எடுக்கப்பட்ட எச்சில்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் குடும்பம் பெரிதாக இருந்தாலும், அந்த குடும்பத்தில் இருந்து பரவிய வைரஸ்கள் தற்போது உருமாறிய வைரஸ் தொற்றுகளாக மாறி, மக்களை கொன்று வருகின்றன. உலகின் பல நாடுகளும் 20க்கும் மேற்பட்ட வகையிலான தடுப்பூசிகளை கண்டறிந்து பயன்படுத்தி வந்தாலும் கூட, கொரோனா குறித்த அச்சம் தீர்ந்தபாடில்லை. தடுப்பூசி போட்ட பல நாடுகளும் கூட, மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. மேலும், தடுப்பூசியின் செயல்திறன் குறித்த சந்தேகங்களையும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக கிளப்பி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள ஃபைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளை காட்டிலும், தற்போது ‘சூப்பர்வாக்சின்’ தடுப்பூசியை அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எம்ஆர்என்ஏ என்ற புதிய தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசியை கண்டறிந்துள்ளனர். ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகளின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே இந்த தடுப்பூசியும் உருவாக்கப்பட்டுள்ளது. எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்படும் இந்த தடுப்பூசி, உடலுக்குள் சென்று கொரோனா-ஸ்ப்ரிச் புரதத்தைத் தூண்டுகின்றன. புதியதாக உருவாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியானது எலிகளுக்கு போட்டு சோதிக்கப்பட்டது. அது, ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கின்றன. மேலும், ஸ்பைக் புரதங்களை செயலிழக்கச் செய்கின்றன.  இந்த ‘சூப்பர்வேக்சின்’ தடுப்பூசியை தென்னாப்பிரிக்காவில் உருமாறிய வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு போட்டதில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதனால், கொரோனா குடும்பத்தின் சார்ஸ், மெர்ஸ், சார்ஸ் - கோவ் - 2 என்று எந்தவகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், சூப்பர்வேக்சின் ஒரு பொதுவான தடுப்பூசியாக இருக்கும் என்கின்றனர். மேலும், அடுத்தாண்டு இந்த தடுப்பூசியை மனிதர்களுக்காக சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: