ஜம்மு - காஷ்மீர் தலைவர்களுடன் இன்று ஆலோசனை: முடக்கத்துக்கு மத்தியில் மோடி - அமித் ஷாவின் ‘அஜெண்டா’ என்ன?...22 மாதமாக நெருக்கடியில் இருந்த அரசியல் சூழல் மாறுகிறது

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு கிட்டதிட்ட 22 மாதங்கள் முடிந்த நிலையில், அம்மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். அதனால், ஜம்மு காஷ்மீரில் முடக்கப்பட்ட அரசியல் சூழல்கள் மாறி வருகிறது.

கடந்த 2018ல் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த மெஹபூபா முப்தி அரசுக்கு பாஜக ஆதரவளித்து வந்தது. திடீரென ஆதரவை வாபஸ் பெற்றதால், மெஹபூபா முப்தி ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், 2018 ஜூன் 19ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2018 நவம்பரில் சட்டப் பேரவை கலைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சட்டமன்றம் கலைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதுவும் நடத்தபடவில்லை. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் வந்தது. பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்தது. அதன் தொடர்ச்சியாக 2019 ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

முன்னாள் முதல்வர்கள், அரசியல்கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.  ஆனால், ஜம்மு - காஷ்மீரில் அன்று முதல் இன்று வரை ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேநேரம், ஜம்மு - காஷ்மீரின் அரசியல் சூழ்நிலைகளும் முற்றிலும் மாறிவிட்டது.  இந்த நிலையில், கொரோனா நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் குறித்து முக்கிய அரசியல் கட்சிகளின் அமைப்பான ‘குப்கர்’ பிரகடனத்தின் மக்கள் கூட்டணி (பிஏஜிடி) தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் பெரும்பாலான தலைவர்கள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், வீட்டுக் காவலிலும், சிறைவாசமும் அனுபவித்தவர்கள்தான். இன்றைய கூட்டத்தில், பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப் போகிறார்களா? ஜம்மு - காஷ்மீரின் எதிர்காலம் குறித்து என்ன பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள்? என்று பல்வேறு யூகங்கள் பேசப்பட்டு வருகின்றன.

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் (ஜே.கே.ஆர்.ஏ) ஆகியவற்றை நீக்குவது தொடர்பான விவகாரம் நிலுவையில் உள்ளதால், அந்த பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  கிட்டதிட்ட 22 மாதங்களாக அரசியல் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிய ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துதல் குறித்து பேசவும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட 8 அரசியல் கட்சிகளின் 14 தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. முதல் முறையாக காஷ்மீர் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதால், மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மத்திய அரசின் பேச்சுவார்த்தை குறித்து விமர்சித்து இருந்தார்.  முன்னதாக குப்கர் பிரகடன மக்கள் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் தலைவர்களின் சந்திப்புக்கு, மத்திய அரசுக்கு ஏதேனும் அழுத்தம் உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு இல்லை என்றே சொல்லலாம். ​​ஜம்மு-காஷ்மீரின் விவகாரத்தில் உள்ளூர் மட்டத்தில் இருந்து சர்வதேச அளவிலும் மத்திய அரசுக்கு சாதகமான சூழல்களே நடந்துள்ளன. மத்திய அரசின் முடிவுக்கு உடன்படாத காஷ்மீர் தலைவர்கள் சிலர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டனர். அதனால், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தமட்டில் அரசியல் சூழல்களை உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஜம்மு - காஷ்மீரின் விவகாரங்களுடன் தொடர்புடைய சில விஷயங்களை பார்க்கும் போது, லடாக் எல்லையான சீனாவில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருவதாக கூறுகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற்றதால், தலிபான்கள் மீண்டும் காபூலை அடைய வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முயற்சியால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட வாய்ப்புள்ளது. தற்போது இந்தோ  - பாகிஸ்தான் எல்லையில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

பாகிஸ்தான் தலைவர்களின், இந்தியா எதிர்ப்பு அறிக்கைகளும் கொஞ்சம் தணிந்துள்ளன. எல்லையில் ஊடுருவல்கள் குறைந்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் தீவிரவாதி சோபூரில் கொல்லப்பட்டான். கடந்த எட்டு மாதங்களில் எந்தவொரு வெளிநாட்டு தீவிரவாதியும் கொல்லப்படவில்லை. ஆனால், தற்போது எல்லையில் ஊடுருவல்களுக்கு பதிலடி கடுமையாக கொடுக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவ் வழக்கில், இந்தியா எதிர்பார்த்த நிவாரணம் கிடைத்துள்ளது. இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் மட்டும் அமைதியற்ற அரசியல் சூழல் நிலவுகிறது. அதனால், இன்று நடைபெறும் ஜம்மு - காஷ்மீர் தலைவர்களுடன் மோடி - அமித் ஷா சந்திப்பு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>