மேலும் 2 மாணவிகள் கடத்தல், பாலியல் புகார்: சிவசங்கர் பாபா மீண்டும் கைது

செங்கல்பட்டு: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மீது மேலும் 2 மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் மீண்டும் கைது செய்தனர். சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  சிபிசிஐடி மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் அவரை பிடிக்க தீவிரமாக களம் இறங்கினர். டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வந்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி போலீஸ் எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி ஜெயமோகன், இன்ஸ்பெக்டர் குணவரதன் ஆகியோர் சிவசங்கர் பாபா தங்கியிருந்த கேளம்பாக்கம் ஆசிரமத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி அம்பிகா உத்தரவின்பேரில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  சிறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் உள்ளார்.

இதற்கிடையில், சிவசங்கருக்கு மாணவிகளை சப்ளை செய்ததாக சுசில்கரி பள்ளியின் ஆசிரியை சுஷ்மிதா 4 மாத கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் கூடுதல் தகவல்கள் தெரியவரும் என  சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் குணவரதன் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனுதாக்கல் செய்தார்.  இந்த மனு  நீதிபதி அம்பிகா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிவசங்கர் பாபா மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருப்பதால் இந்த மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது கேளம்பாக்கத்தைச் சேர்ந்த சுசில் ஹரி பள்ளியில் படித்த மாணவி இருவர் தனித்தனியே புகார் அளித்துள்ளனர். இதில், தங்களைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீண்டும் அவரை கைது செய்தனர். இந்த உத்தரவை  நீதிபதி அம்பிகா மற்றும் சென்னை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  சிவசங்கர் பாபா மீது மேலும் பல மாணவிகள் புகார் அளித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவசங்கர் பாபாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, அவரது பல லீலைகள் குறித்து தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர். தற்போது அவருடன் நேரடி தொடர்பில் இருந்த ஒரு ஆசிரியை மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பல ஆசிரியைகள் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் உள்ளனர் என சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர். சுசில் ஹரி பள்ளியில் நடந்த இந்த பாலியல் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதால், ஏராளமானோர் அப்பள்ளியில் இருந்து டிசி ( மாற்றுச்சான்றிதழ் ) வாங்கிய வண்ணம் உள்ளனர். அப்பள்ளியின் மீது கல்வித்துறை உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

Related Stories:

>