இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன்: இந்த வெற்றி நீண்டகாலம் நினைவில் இருக்கும்..! கேன் வில்லியம்சன் பேட்டி

சவுத்தாம்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 92.1 ஓவர்களில் 217 ரன்னுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 99.2 ஓவரில் 249 ரன் எடுத்தது. இதையடுத்து 32 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 73 ஓவரில் 170 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக  ரிஷப் பன்ட் 41 ரன் எடுத்தார்.  நியூசிலாந்து தரப்பில், சவுத்தி 4, ஜேமீசன் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 139 ரன் இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 45.5ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்து வெற்றி பெற்றது.  கேப்டன் வில்லியம்சன் நாட்அவுட்டாக 52, ரோஸ் டெய்லர் 47 ரன் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்து கைப்பற்றியது. அந்த அணிக்கு கதாயுதம் மற்றும் ரூ.11.75 கோடி ரொக்க பரிசு வழங்கப்பட்டது. தோல்வி அடைந்த இந்திய அணிக்கு 5.75 கோடி கிடைத்தது. 2 இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட் வீழ்த்திய ஜேமீசன் ஆட்டநாயகன் விருது பெற்றார். பட்டம் வென்ற நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெற்றிக்கு பின் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது: இது மிகவும் சிறப்பு வாய்ந்த உணர்வு. 2 நெருங்கிய நண்பர்களில ஒருவர் பட்டம் பெறுவது மகிழ்ச்சி. விராட் மற்றும் இந்திய அணிக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் நம்பமுடியாத அணி. எல்லா நிலைகளிலும் இந்த இந்திய அணி எவ்வளவு வலிமையானது என்பது எங்களுக்குத் தெரியும். முதல் முறையாக எங்கள் வரலாற்றில் நாங்கள் ஒரு உலக பட்டத்தை வென்றுள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் எங்களிடம் 22 சிறந்த வீரர்கள் உள்ளனர். வெற்றியில் பெரும் பங்கு வகித்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும். எங்களிடம் எப்போதும் எல்லா நட்சத்திரங்களும் இல்லை, இந்த போட்டியில் நாங்கள் அதைப் பார்த்தோம். ரோஸ் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் மிகவும் அமைதியானவர், ரோஸுடன் கூட்டு சேர்ந்து இறுதியில் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றிக்கு தகுதியான அணி: விராட்கோஹ்லி பாராட்டு

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘வில்லியம்சன் மற்றும் குழுவினருக்கு முதலில் பெரிய வாழ்த்துக்கள். எங்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். 2வது நாளில் நாங்கள் 3 விக்கெட் மட்டுமே இழந்தோம். ஆனால் மழையால் தடை இல்லாமல் ஆட்டம் தொடர்ந்திருந்தால் எங்களுக்கு அதிக ரன்கள் கிடைத்திருக்கும். 2வது இன்னிங்சில் 30-40 ரன் குறைவாக எடுத்துவிட்டோம். ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை வைத்திருக்க வேண்டும். நாங்கள் இது சிறந்த ஆடும் லெவன் என நினைத்தோம். ஜேமீசன் ஒரு தரமான கிரிக்கெட் வீரர். அவர் கடும் நெருக்கடி அளித்தார். ஆட்டநாயகன் விருதுக்கு அவர் தகுதியானவர்.  ஒரு ஆட்டத்தில் சிறந்த டெஸ்ட் அணியை தீர்மானிப்பதில் உடன்பாடு இல்லை. 3 போட்டிகள் தேவை’’ என்றார்.

Related Stories: