யூரோ கோப்பை கால்பந்து: 2ம் சுற்றில் போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி

புடாபெஸ்ட்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 16 நாடுகள் மோதவுள்ள 2ம் சுற்றுக்கு போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் தகுதி பெற்றுள்ளன. செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று இரவு நடந்த போட்டியில் ஸ்வீடன் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே அற்புதமான கிராஸ் ஷாட் மூலம் ஸ்வீடன் அணியின் மிட்ஃபீல்டர் எமில் ஃபோர்ஸ்பெர்க், ஒரு கோல் அடித்தார். பின்னர் 2ம் பாதியில் 59வது நிமிடத்திலும் அழகாக ஒரு ஃபீல்ட் கோல் அடித்தார். அதன் பின்னர் போலந்து அணி வீரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தாக்குதல் பாணியில் இறங்கினர். இதற்கு பலனும் கிடைத்தது. போலந்தின் முன்கள வீரர் ராபர்ட் லெவாண்டோஸ்கி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையை எட்டின. இறுதியில் கூடுதல் நேரத்தில் ஸ்வீடன் அணிக்கான வெற்றி கோலை விக்டர் கிளாசன் அடித்து, பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

செவில்லேவில் நடந்த போட்டியில் ஸ்லோவோகியாவை 5-0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய ஸ்பெயின், இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.  ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல்-பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு துவங்கியது. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களும், பிரான்சின் முன்கள வீரர் கரீம் பென்சமா 2 கோல்களும் அடித்தனர்.  இப்போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முனீச் நகரில் நடந்த ஜெர்மனி-ஹங்கேரி அணிகளுக்கு இடையேயான போட்டியும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் ஜெர்மனி அணி கோல் கணக்கில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் டென்மார்க், வேல்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, செக்.குடியரசு, பெல்ஜியம், போர்ச்சுகல், குரோஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் உக்ரைன் ஆகிய 16 அணிகள் 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 2ம் சுற்று போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற உள்ளன. இதில் வரும் 26ம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற உள்ள முதல் போட்டியில் டென்மார்க்-வேல்ஸ் அணிகள் மோதவுள்ளன. அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லண்டனில் நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் இத்தாலியை எதிர்த்து ஆஸ்திரியா மோதவுள்ளது.

Related Stories: