திருவலத்தில் 1939ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இரும்பு பாலத்தில் விரிசலை சீரமைத்து பராமரிக்க வேண்டும்

*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்ைக

திருவலம் : திருவலத்தில் கடந்த 1939ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இரும்பு பாலத்தில் விரிசலை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் பேரூராட்சியில் கடந்த 1939ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ராஜேந்திரா இரும்பு பாலம் இந்திய வரலாற்று நினைவு சின்னமாக உள்ளது. இந்நிலையில், தற்போது, இப்பாலம் காட்பாடி நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் பணி மற்றும் பராமரிப்பு) கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இப்பாலத்தில் ரசாயன கலவையால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், பாலங்களுக்கு இடையே இணைப்பு பகுதிகளில் இரும்பு கம்பிகளால் கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலத்தின் இணைப்பு பகுதிகளில் கான்கிரீட் கலவைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

 இதனால் அவ்வழியாக பைக்குகளில் செல்வோர்  பாலத்தில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து விபத்துக்களில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் இச்சிரமங்களை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தின் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 ஆயிரம் டன் துருப்பிடிக்காத இரும்பு

திருவலம் இரும்பு பாலம் கட்டுமான பணிகள் கடந்த 1935ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த இரும்புப் பாலம் 11 தூண்களுடன் கூடிய 500 மீட்டர் நீளத்தில் சுமார் 10 ஆயிரம் டன் இரும்பு தளவாடங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இதற்காக 1,200 தொழிலாளர்களை கொண்டு ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிகொண் டிருந்த காலக்கட்டத்தில் ஆற்றின் நீரோட்டத்தை கணித்து துருப்பிடிக்காத சாய்வு வடிவ இரும்பு தூண்களை கொண்டு பாலம் கட்டப்பட்டது.

ஹவுரா பாலத்துக்கு முன்னோடி

கொல்கத்தாவையும் ஹவுரா நகரையும் இணைக்கும் வகையில் கடந்த 1938ம் ஆண்டு கங்கை நதியின் கிளை நதியான ஹூக்ளி நதியின் மீது ஹவுரா இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் திருவலம் ராஜேந்திரா பாலத்தின் தொழில் நுட்பத்துடன், திருவலம் பாலத்தை கட்டிய தாராப்பூர் இன்ஜினியரிங் நிறுவனத்தால் கட்டப்பட்டது. அந்த வகையில் ஹவுரா பாலத்துக்கு முன்னோடியாக திருவலம் இரும்பு பாலம் திகழ்கிறது. திருவலம் இரும்பு பாலத்தில் பழைய தமிழ் சினிமா படங்கள் முதல் புதிய சினிமா படங்கள் வரை படம் பிடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் முக்கியமானதாக இந்த பாலம் திகழ்ந்து வருகிறது.

Related Stories: