அணைக்கட்டு அருகே கானாறு பாலம் சேதம் சுடுகாட்டிற்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி

*நடவடிக்கை எடுக்க கோரி எம்எல்ஏவிடம் மனு

அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே கானாறு பாலம் சேதமடைந்ததால் சுடுகாட்டிற்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். அணைக்கட்டு ஒன்றியம், தேவிசெட்டிகுப்பம் ஊராட்சி, ஆண்டிகொட்டாய் கிராமத்தில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக கானாற்றில் ஒரு சிறிய பாலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பின்னத்துரை மலை அடிவாரத்தில் இருந்து திப்பசமுத்திரம் ஏரிக்கு நீர் செல்லும் கானாற்று கால்வாய் மேல் கட்டப்பட்டிருந்த இந்த பாலத்தின் வழியாக மக்கள் சுடுகாட்டிற்கு சென்று வந்தனர்.  

இந்நிலையில், இந்த பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ஆனால், அப்போதைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில், கடந்த ஓராண்டில் பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால், சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்து செல்ல வழியின்றி கடந்த ஓராண்டாக அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.  

இந்நிலையில், கடந்த 17ம் தேதி அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து எம்எல்ஏ நந்தகுமாரை நேரில் சந்தித்து சேதமடைந்துள்ள பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலத்தை கட்டி சுடுகாட்டிற்கு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, எம்எல்ஏ நந்தகுமார் கடந்த 18ம் தேதி திட்ட அலுவலருக்கு பரிந்துரை செய்து அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார். எனவே, இனியாவது அதிகாரிகள் ஆண்டிகொட்டாய் கிராமத்தில் புதிய பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: