குண்டாறு, மோட்டை அணையில் தடை மீறி குவியும் சுற்றுலா பயணிகள்

*ஆபத்தை உணராமல் ‘உற்சாக’ குளியல்

செங்கோட்டை : கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை தொடர்கிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றாலம் அருவிகள் இந்த ஆண்டும் களையிழந்து காணப்படுகின்றன. அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் சென்று விடாமல் தடுக்க அனைத்து அருவிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேவேளையில் போலீஸ் பாதுகாப்பு இல்லாத தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த கண்ணுப்புளிமெட்டில் அமைந்துள்ள குண்டாறு அணை சுற்றுலா பயணி களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது. குண்டாறு அணை தென்காசி மாவட்டத்திலேயே மிகவும் சிறிய அணையாகும். 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைதான் மாவட்டத்தில் முதலில் நிரம்பி வழியும். இந்த அணை நீரின் மூலம் 12 குளங்களும், 1122 ஏக்கர் பரப்பளவுடைய விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம் கண்ணுப்புளி மெட்டு, இரட்டைகுளம், வல்லம், புதூர், செங்காட்டை பகுதிகள் குடிநீர் வசதியும் பெறுகின்றன.

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படும் நிலையில் அவர்களின் அடுத்த தேர்வாக குண்டாறு அணை விளங்குகிறது. அணையிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ள நெய்யருவிக்கும் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வருகின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்காகத்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குண்டாறு அணையின் பூங்கா வழியாகவும், பூட்டப்பட்டுள்ள நுழைவு கேட் வழியாக ஏறிக்குதித்தும் செல்லும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள ஆபத்தான பகுதியில் ‘உற்சாக மிகுதியில்’ குளியல் போட்டு வருகின்றனர்.

இதேபோல் குண்டாறு அணைக்கு  செல்லும் வழியில்  4 கி.மீ. தொலைவில் உள்ள மோட்டை அணைக்கும் சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.  27 அடி உயரமுள்ள இந்த அணையின் மூலம் 22 குளங்கள் உட்பட சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர, இப்பகுதி கிராம மக்கள் குடிநீருக்கும் இதை பயன்படுத்தி வருகின்றனர் தற்போது இந்த அணையிலும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து வருகின்றனர்.

மோட்டை அணையில் பாதுகாப்பு வசதிகள் என்பதே கிடையாது. மேலும் இந்த அணை சேறும், சகதியும் நிறைந்தது.  இதனை அறியாத வெளியூர் சுற்றுலா பயணிகள் விபரீதம் உணராமல் இங்கும் வந்து குளித்து  வருகின்றனர்.  உயிர்ப்பலி ஏதும் நேரும் முன் இவ்விரு அணைகளிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி சுற்றுலா பயணிகள் குளிக்கச் செல்வதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>