வேலூர் சத்துவாச்சாரியில் வெகுஜோராக நடக்கிறது நோயாளிகளுக்கு பயன்படுத்திய சிரஞ்சில் அடைத்து போதை தரும் கிரீம் சாக்லெட் விற்பனை

வேலூர் : தமிழகத்தில் மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் குழந்தைகளை கவரும் வகையில் வித விதமான வண்ணங்களில், சாக்லெட்டுகள், கிரீம் பிஸ்கட்டுகள் என்று ஏராளமான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தின்பண்டங்கள் விற்பனை செய்ய உரிய அனுமதி உள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2 பகுதியில், நோயாளிகளுக்கு பயன்படுத்திவிட்டு வீசி எறிந்த சிரஞ்ச்களை சேகரித்து அதில் கிரீம் சாக்லெட் அடைத்து கடைகளுக்கு அனுப்பி ₹5 மற்றும் ₹10 என்ற விலையில் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். இந்த சிரஞ்சு சாக்லெட்டுகள் வேலூர், சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது எல்லா கடைகளிலும் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சாக்லெட்டுகளை அப்பகுதிகளில் உள்ள குழந்தைகள் அதிகளவில் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதில் மிகவும் பழைய அழுக்கடைந்த சிரஞ்சுகளும் உள்ளன. ஏற்கனவே கொரோனா உள்ளிட்ட நோய்களினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது வேலூரில், புதிதாக சிரஞ்சில் அடைத்து வைத்து கிரீம் சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாக்லெட்டுகள் உண்டால் போதை ஏற்படுவது போல் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.அதோடு சாக்லெட்டுகள் வழக்கமாக காகிதங்களில் சுற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த சாக்லெட்டோ, மருத்துவத்துறையினர் பயன்படுத்தும் சிரஞ்சில் சாக்லெட் கிரீம்கள் நிரப்பி விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகளும் அதிகளவில் இதனை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் பெற்றோர்களும், குழந்தைகள் அழுகையை சமாளிக்க இதுபோன்ற சாக்லெட்டுகளை வாங்கிக்கொடுத்து விடுகின்றனர்.

சாக்லெட் நிரப்ப பயன்படுத்தப்படும் சிரஞ்சுகள் மருத்துவ கழிவுகளில் இருந்து ெகாண்டுவந்து, பயன்படுத்தப்படுகிறது. எந்தெந்த நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள் இவை என்பது யாருக்கும் தெரியாது. எனவே இந்த சிரஞ்சுகள் மூலம் ஏற்படும் ஆபத்தையும் குழந்தைகளின் உயிரிழப்பையும் தடுக்க சிரஞ்சுகளில் அடைத்து சாக்லெட் விற்பனை செய்யும் கும்பல் மீது, மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழப்புகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை

சாதாரணமாகவே குழந்தைகள் சாக்லெட்டுகள் அதிகமாக சாப்பிட்டால் அவர்களுக்கு தொண்டையில் இன்பெக்‌ஷன் ஆகிவிடும். தரமற்ற சாக்லெட்டுகள் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்புகள் ஏற்படக்கூடும். சாக்லெட்டின் தன்மையை பொறுத்து, சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படலாம். என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதில், நோயாளிகளுக்கு பயன்படுத்திய சிரஞ்சுகளில் உள்ள சாக்லெட்டுகள் உண்பதால், எந்த நோய்க்கு சிரஞ்சு பயன்படுத்தினார்களோ, அதே பாதிப்பு வரக்கூடும். மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள் எக்காரணம் கொண்டும் மறு பயன்பாட்டிற்கு வரக்கூடாது. அப்படி மறுபயன்பாட்டிற்கு வந்துள்ளது என்றால், அந்த சிரஞ்சு எங்கு வாங்கப்பட்டது என்று கண்டறிந்து அந்த மருத்துவ நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.

சென்னையில் வடமாநிலத்தவர்கள் கைது

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் கலந்த சாக்ெலட்டுகளை வாங்கி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்த வடமாநிலத்தவர்களை போலீசார் சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். சாக்லெட்டுகளில் போதை பொருட்கள் சேர்ப்பதால், மாணவர்கள் தொடர்ந்து அதனை சாப்பிட வேண்டிய நிலைக்கு மாறிவிடுகின்றனர். தற்போது வேலூரில் போதை தரும் கிரீம் சாக்லெட்டுகள் விற்பனை நடந்து வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ ஊழியர்களுக்கு தொடர்பு

மருத்துவமனைகளில் பயன்படுத்தும் சிரஞ்சுகள் உட்பட மருத்துவ கழிவுகளை முறைப்படி அழிக்க வேண்டும். இந்நிலையில், நோயாளிகளுக்கு பயன்படுத்திய சிரஞ்சுகளில் சாக்லெட் கிரீம் அடைத்து குழந்தைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிரஞ்சுகளை சேகரித்து சாக்லெட் கிரீம் அடைத்து விற்பனை செய்யும் கும்பலுக்கு விற்று பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. எனவே எந்தெந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருக்கிறது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>