ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு நேர்ந்த சோகம் ஆர்டர் செய்தது செல்போன்... வந்து சேர்ந்தது டைல்ஸ் கல்...

திருப்பூர், :   திருப்பூரில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக டைல்ஸ் கல்லை வைத்து அனுப்பிய விவகாரம் குறித்து ஆப்செட் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.  திருப்பூர் நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (43). திருப்பூர் மில்லர் ஸ்டாப் பகுதியில் ஆப்செட் பிரிண்டிங் நடத்தி வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனத்தின் ரூ.14,500 மதிப்புள்ள செல்போன் ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதியன்று அவருக்கு பார்சல் வந்தது. செல்போன் வந்துவிட்டது என்ற ஆர்வத்துடன் அந்த பார்சலை அவர் பிரித்தார். உள்ளே இருந்த செல்போன் பெட்டியை திறந்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஏனென்றால் அந்த பெட்டிக்குள் செல்போனிற்கு பதிலாக செல்போன் அளவில் டைல்ஸ் கல் இருந்தது. இது குறித்து அந்த செல்போன் நிறுவனத்திற்கு மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாருக்கு தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. எனவே அவர் இது குறித்து ஆன்லைன் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீதும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இது குறித்து சம்பத்குமார் கூறுகையில், ‘‘எப்போதும் செல்போன் ஆர்டர் செய்தால் 3 நாட்களுக்குள் கிடைத்து விடும். ஆனால் இந்த முறை 5 நாட்களுக்கு பிறகுதான் கிடைத்தது. பின்னர் அந்த பார்சலும் முழுமையாக பேக் செய்யாமல் இருந்தது. பிரித்து பார்த்தபோது செல்போன் எடையில் உள்ள டைல்ஸ் கல்லை செல்போனிற்கு பதிலாக வைத்து பார்சல் செய்து அனுப்பியுள்ளனர். இது குறித்து செல்போன் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளேன்.

ஆனால் அவர்கள் தற்போது வரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த செல்போன் நிறுவனத்திலிருந்து வேறு வேறு நபர்கள் இணைப்பில் வந்து வரும் 29ம் தேதிக்குள் செல்போனுக்கு பதிலாக டைல்ஸ் கல் வைத்த நபரை பிடித்து விடுவோம் என கூறுகின்றனர்’’ என்றார்.

Related Stories:

>