பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கோட்டான் திருக்கை

*100 கிலோ எடையுள்ளது

கொள்ளிடம் : கொள்ளிடம் அடுத்த பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் 100 கிலோ எடையுள்ள ராட்சத கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த வருடம் மீன்பிடி தடை காலத்துக்குப் பிறகு மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

ஆனால் மீனவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. சாதாரணமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மீனவர் வலையில் கோட்டான் திருக்கை மீன்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். ஆனால் இந்த வருடம் கோட்டான் திருக்கை கிடைப்பது அரிதாக உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு மீனவர் வலையில் ஒரே ஒரு கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. 100 கிலோ எடையுள்ள இந்த கோட்டான் திருக்கை மீனை அப்படியே விற்பனை செய்ய முடியாது. காரணம் கோட்டான் திருக்கை மீனை மீனாக சமைத்து பெரும்பாலோர் சாப்பிட விரும்புவதில்லை.

இந்த வகை மீன் கருவாடாக உலர்த்தப்பட்டு பின்னர் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கோட்டான் திருக்கை கருவாடு ரூ.60 முதல் 70 வரை விலை போகிறது. இதுகுறித்து பழையாறு மீன் வியாபாரி பொன்னையா கூறுகையில், வருடம்தோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். ஒவ்வொரு மீனும் ரூ.6000 முதல் 8000 வரை விலை போகும்.

சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த இந்த மீன்கள் கருவாடாக உலர்த்தப்பட்டு நாமக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைத்தால் மீனவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.

Related Stories: