நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் காட்டு யானைக்கு காலர் ஐடி பொருத்த 2 கும்கிகள் மேட்டுப்பாளையம் வந்தன

*கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்வதால் நடவடிக்கை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் சுற்றித்திரியும் ஆண் காட்டு யானை பாகுபலியை பிடித்து காலர் ஐடி பொருத்துவதற்காக டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துரை,குரும்பனூர்,தாசம்பாளையம்,சமயபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களான வாழை,தென்னை,பாக்கு மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

ஆண்யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து தோட்டம் மற்றும் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் வாழைகளை ருசிபார்த்து வந்தது. பாகுபலி என அழைக்கப்படும் இந்த யானையால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாதபோதும், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்ததால், இந்த யானை நடமாட்டத்தை கண்காணிக்க காட்டுயானைக்கு கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து காலர் ஐடி பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டனர்.

இதற்காக தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், அவர் அனுமதி அளித்ததன் பேரில் கோவை மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் மேற்பார்வையில் காட்டு யானையான பாகுபலிக்கு காலர் ஐடி பொருத்துவதற்காக அதனை பிடிக்க டாப்சிலிப் இருந்து கும்கி யானை கலீம் (57) நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் வந்தது.

நேற்று மாலை மாரியப்பன் என்ற மற்றொரு கும்கியும் அழைத்து வரப்பட்டது. மேட்டுப்பாளையம் ரேஞ்சர் பழனிராஜா தலைமையில் ஒன்றை யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சரியான இடத்திற்கு யானை வந்தவுடன் வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை மருத்துவர் குழுவிற்கு தகவல் அளிக்கப்படும். அவர்கள் வந்து இடத்தை ஆய்வு செய்து, பிறகு ஆபரேஷன் பாகுபலி தொடங்கும் என்றும்,  2 கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் ஐடி பொருத்தப்பட உள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: