×

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பேசி, அடையாள அட்டை கட்டாயமில்லை!: மத்திய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பேசி வைத்திருக்க வேண்டும் என்பதோ அடையாள ஆவணங்களோ கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீடற்றவர்கள் தடுப்பூசி போட முடியாமல் சதித்திட்டம் போல் புறக்கணிக்கப்படுவதாகவும், செல்பேசி மற்றும் இணையம் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பெற இயலாத ஆங்கிலம் தெரியாத ஏழை மக்கள், தடுப்பூசிக்காக பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 


இந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் செயலி மூலம் முன்னதாகவே இணையவழியில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


பயனாளிகள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் கோ-வின் செயலியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஓடியா, வங்கம், அஜாமிஸ், பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 12 மொழிகள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. தடுப்பூசி சேவையை பெற சொந்தமாக செல்பேசி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய புகைப்பட அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள சான்றுகளில் ஒன்றை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் எதுவுமே இல்லாதவர்கள் மற்றும் செல்பேசி வைத்துக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி முகாம்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 



Tags : Federal Government , Corona vaccine, cell phone, ID card, federal government
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...