விரைவில் டெங்குவுக்கு ஆயுர்வேத மருந்து ! மத்திய அமைச்சர் தகவல்

நன்றி குங்குமம் டாக்டர்

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம், கபசுரக்குடிநீர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல், டெங்குவை முற்றிலும் குணமாக்கும் வகையில் ஆயுர்வேத மருந்து பற்றிய பரிசோதனை நடந்து வருகிறது. விரைவில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியிருக்கிறார் ஆயுஷ் துறை இணை அமைச்சர் பத் நாயக்.


‘சரக் சம்கிதா, சுஷ்ருத் சம்கிதா போன்ற பழங்கால புத்தகங்களில் மருத்துவம் பற்றிய தகவல்கள் ஏராளமாக பொதிந்து கிடக்கின்றன. இதன் அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் இருக்கின்றன. அந்த வகையில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதற்கும் மருந்துகள் ஆயுர்வேதத்தில் உண்டு.

இது பொதுமக்களுக்குப் பயன்படுவதுடன் அரசாங்கத்துக்கு பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியைத் தரும் வாய்ப்புகள் இருக்கிறது. ஏறக்குறைய 20 லட்சம் மருந்துகளை உருவாக்கி வர்த்தகத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகள் நடந்துவருகின்றன. குறிப்பாக 2022-ம் ஆண்டுக்குள் ஆயுர்வேத மற்றும் ஆயுஷ் வர்த்தகத்தை 3 பில்லியன் டாலரிலிருந்து 10 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பது திட்டம்.

ஆயுர்வேதாவை டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா  மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்களுடன் இணைத்தால் ஆயுர்வேத மருத்துவத்துக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாட்டில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கொண்டு செல்ல  ஆயுர்வேதாவை பயன்படுத்த முடியும்.

ஆயுர்வேத தயாரிப்புகளையும், சிகிச்சைகளையும் விரிவுபடுத்தினால் நாட்டின்  பொருளாதாரத்தில் ஆயுஷ் அமைச்சகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க முடியும். ஆயுர்வேதம் சிறந்தது, சுத்தமானது என உலகம் உணர ஆரம்பித்துள்ளது. இதை உலகம் முழுவதும் பரப்பி வர்த்தகத்தை மேம்படுத்த சிறந்த வாய்ப்புகள் உள்ளன. ஒரு சில ஆண்டுகளில் டெங்குவுக்கான ஆயுர்வேத மருந்து பரிசோதனை முடிந்து விற்பனைக்கு வந்துவிடும்’ என்று கூறியிருக்கிறார்.

- கௌதம்

× RELATED தேசிய குடற்புழு நீக்க தினம் :...