தமிழகம் முழுவதும் நூதன முறையில் கைவரிசை காட்டிய ஏடிஎம் கொள்ளையர்கள் 3 பேர் அரியானாவில் அதிரடி கைது: 14 வழக்குகளின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் ரூ.1 கோடிக்கு மேல் நூதன முறையில் திருடிய வழக்கில், அரியானாவில் தலைமறைவாக இருந்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னையில் கைவரிசை காட்டிய 14 வழக்குகள் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் ராமாபுரம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, வடபழனி உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் வங்கிக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராமாபுரம் எஸ்பிஐ வங்கியின் மேலாளர் ராயலாநகர் காவல்நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார்.

புகாரின்படி, போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், ஏடிஎம் மையத்திற்கு வந்த வடமாநில கொள்ளையர்கள் 4 பேரில்  இருவர் மையத்திற்கு முன்பும், மையத்திற்குள் 2 பேருமாக டெபாசிட் இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் பணத்தை கொள்ளைடித்து ெசன்றது தெரியவந்தது.  இதேபோல் வேளச்சேரி, தரமணி, வடபழனி உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் இதே 4 பேர் கைவரிசை காட்டியதும் சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்தது. முதலில், இந்த மோசடியை போலீசார் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். ஆனால், டெபாசிட் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் பணத்திற்கு எந்த ஆதாரங்களும் எஸ்பிஐ வங்கியிடம் இல்லை. இருந்தாலும் பணம் மட்டும் மாயமாகி இருந்தது. இதனால் போலீசார் குழப்பமடைந்தனர். பணம் திருட்டு குறித்து அறிக்கை அளிக்கும்படி எஸ்பிஐ வங்கிக்கு மாநகர காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த கடிதத்தின்படி பணம் மாயமானது குறித்து அறிக்கையுடன் சென்னை மண்டல தலைமை மேலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், எஸ்பிஐ வங்கி சார்பில் இரண்டு நிறுவனங்களிடம் இருந்துதான் இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. ஜப்பான் நிறுவனமான ஓ.கே.ஐ. என்ற நிறுவனம் தயாரித்து கொடுத்த டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் இந்த நூதன திருட்டு நடந்துள்ளது என்று எஸ்பிஐ வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும், முதற்கட்டமாக இந்த நூதன திருட்டு சென்னை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் 19 இடங்களில் ரூ.48 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக வங்கி சார்பில் கூறப்பட்டது. இந்த திருட்டு குறித்து சம்பந்தப்பட்ட டெபாசிட் இயந்திரம் அமைக்கப்பட்ட ஏடிஎம் மையங்களில் பணம் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பிறகே முழுமையாக எவ்வளவு பணம் திருடப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என எஸ்பிஐ வங்கி போலீசாரிடம் தெரிவித்துள்ளது.

அதைதொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை முழுவதும் கைவரிசை காட்டியது 4 பேர் கொண்ட வடமாநில கும்பல் என்று தெரியவந்துள்ளது. டெபாசிட் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்ட நேரத்தில் வடமாநில கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் சிக்னல்கள் அனைத்தும் ஒன்றாக இருந்ததும் தெரியவந்தது.  எனவே, வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வடமாநில கொள்ளையர்களின் செல்போன் சிக்னல்களை கண்காணித்தனர். அப்போது, கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் சிக்னல் அரியானா மாநிலத்தில் இருப்பதாக காட்டியது.

உடனே கூடுதல் கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் விமானம் மூலம் அரியானா விரைந்து சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு மேவாக் மாவட்டம் வல்லப்கர் என்ற கிராமத்தை சேர்ந்த அமீர் (37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4.5 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின்படி மேலும் 2 பேரை தனிப்படையினர் கைது ெசய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தனிப்படையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 3 பேரிடம் நடத்திய விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு இந்த நூதன திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம் இயந்திரத்தை பராமரிக்கும் பிரிவு தனியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த பராமரிப்பு பிரிவில் பணியாற்றிய வங்கி ஊழியர்களின் உதவியுடன் நூதன மோசடியில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முக்கிய குற்றவாளியை கைது செய்தால்தான் நூதன திருட்டின் பின்னணி குறித்து முழுமையாக தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.  எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அளித்துள்ள புகாரின்படி, ரூ.50 லட்சத்திற்கு மேல் நூதன திருட்டு நடந்துள்ளதால் இந்த வழக்குகளை குற்றப்பிரிவில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 14 வழக்குகள் தற்போது மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே,  தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், சென்னை பெரியமேடு-வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு  சொந்தமான மையத்தில் பொருத்தப்பட்டுள்ள டெபாசிட் இயந்திரத்தில் உள்ள பணத்தை கிளை மேலாளர் ராஜ்குமார் (29), வங்கி காசாளர் மெர்சி ஆகியோர்  ஆய்வு செய்தனர். அப்போது கடந்த ஜூன் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை அதாவது 190 முறை ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி டெபாசிட் இயந்திரத்தில் இருந்து ரூ.15,71,300 ரொக்கப்பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர் ராஜ்குமார் பணம் திருட்டு குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து ரூ.1.20 லட்சம் மாயமாகி இருந்தது. இதுகுறித்தும் வங்கியின் கிளை மேலாளர் கீழ்ப்பாக்கம் காவல் நியைத்தில் புகார் அளித்துள்ளார். பெரம்பூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான மையத்தின் டெபாசிட் இயந்திரத்தில் இருந்து ரூ.5 லட்சம் மாயமாகி இருந்தது. இதுபோல் சென்னையில் மட்டும் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான 14 ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் ரூ.45 லட்சம் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி தமிழகம் முழுவதும் ரூ.1 கோடிக்கு மேல் பணம் டெபாசிட் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

டெல்லி சென்ற தனிப்படை

அரியானாவில் கைது செய்யப்பட்ட 3  கொள்ளையர்களை சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. இவர்களில் முக்கிய குற்றவாளியான அமீரை முதலில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த தனிப்படையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, சென்னையில் இருந்து டெல்லி சென்ற தி.நகர் துணை  கமிஷனர் அரிகிரன் பிரசாத் தலைமையிலான தனிப்படையினரிடம் அமீரை ஒப்படைத்தனர். அவர்கள் அமீரை சென்னைக்கு அழைத்து வருகின்றனர். கைதான மற்ற இருவரையும் வைத்து தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் அரியானாவில் முகாமிட்டுள்ளனர்.

Related Stories: