×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* பருப்பும், சாம்பார் பொடியும் தரமானதாக இருக்க வேண்டும்.

* புளி பழையதாகவும், கருப்பு நிறத்திலும் இருக்கக்கூடாது.

* முள்ளங்கி, சௌ சௌ, வெண்டைக்காய், சாம்பல் பூசணி, கோவைக்காய், இவைகளை எண்ணெயில் லேசாக வதக்கிப்போட வேண்டும்.

* சின்ன வெங்காயத்தை தோல் எடுத்து இரண்டு நுனிப்பகுதிகளை அரிந்துவிட்டு, அப்படியே முழுசாக காயுடன் சேர்த்துப் போட வேண்டும்.

* சாம்பாருக்கு தேங்காய் அரைத்துவிட்டால், சாம்பாரின் அளவு கூடுவதால் சாம்பாரின் காரம், புளிப்பு சுவை குறைந்து விடும். அதனால் அதை தவிர்த்துவிடுங்கள்.

* கட்டிப்பெருங்காயத்தை பொடி செய்து சாம்பாரில் தாளித்து சேர்த்தால், சாம்பாரின் சுவை கூடும்.
- சுமதி ரகுநாதன், கோயமுத்தூர்.

* கத்தரிக்காய் பொரியல் செய்யும்போது கடைசியில் சீரகத்தை வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* பச்சைப்பட்டாணி வேக வைக்கும்போது அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை தூவினால் பட்டாணி சுவை அதிகமாக இருக்கும்.

*  தோசை சுடும் முன்பு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெயும், உப்பும் கலந்து தேய்த்தால் தோசை சுட அதிக எண்ணெய் தேவைப்படாது.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*சாம்பார் அதிக நேரம் கெட்டுப் போகாமலிருக்க பருப்பு வேக வைக்கும்போது அதனுடன் 2 கிராம்பு சேர்க்கவும். சாம்பார் கூடுதல் மணத்துடன் இருக்கும்.

* தோசை மாவில் தேங்காய்ப்பால் கலந்து தோசை வார்த்தால், தோசை வாசமாகவும், அதிக சுவையுடனும் இருக்கும்.

* அரிசி உப்புமா செய்யும்போது தேங்காய் இல்லையா? அல்லது குறைவாக உள்ளதா? கவலை வேண்டாம். தாளிக்கும் எண்ணெயுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் தேங்காய் சேர்த்த அதே வாசனையுடன் ருசியிலும் குறைவிருக்காது.
- சி.விஜயலட்சுமி, குண்டூர்.

* நெடி அடிக்காமல் மிளகாய் வற்றலை வறுக்க, வத்தலின் காம்பை ஒடித்துவிட்டு பின் வறுத்தால் நெடி அடிக்காது.

* இட்லிக்கு ஆட்டிய மாவில் 4 வெற்றிலைகளின் காம்பை நீக்கி விட்டுப் போட்டால் பொங்கி வழியாது.
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

* பருப்புப்பொடி அரைக்கும்போது இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருப்பதுடன் ஜீரணத்துக்கும் நல்லது.
- எஸ்.கார்த்திக் ஆனந்த், குளத்தூர்.

*தக்காளி, எலுமிச்சைப்பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

* மசால் குழம்பு, கறி குழம்பு ஆகியவைகளில் காரம் அதிகமாக இருந்து விட்டால், குழம்பு கொதிக்கும்போது 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். குழம்பு அளவிற்கு தகுந்தாற்போல் 1 தக்காளி அல்லது 2 தக்காளிகள் பிழிந்து விடவும். பிறகு சிறிது உப்பு போட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விட்டால் காரம் குறைந்துவிடும்.
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

* சீஸ், பன்னீர் போன்றவற்றை கேரட் துருவியில் துருவும்போது துருவியின் இரண்டு பக்கமும் ரீஃபைண்ட் ஆயிலைத் தடவி விட்டு பிறகு துருவினால் ஒட்டாமல் நன்றாக வரும்.

*பாத்திரங்களில் கரி போவதற்கு உப்புத் தண்ணீரில் இரவு முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

*அடை செய்யும்போது துவரம்பருப்புக்கு பதில் கொள்ளு சேர்த்துக்கொண்டால் அடை சுவையாக இருக்கும்.
- ஆர்.பூஜா, சென்னை.

*ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்துடன் 1/2 ஸ்பூன் ஓமத்தை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

* அருநெல்லிக்கனியை ஆவியில் வேக வைத்து எடுத்து அதனுடன் மிளகாய், உப்பு, பூண்டு, பெருங்காயம் சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி. தயிர் சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

*கருப்பு எள், தினை, அரிசி மாவு, பொட்டுக் கடலை, நெய், பனை வெல்லம், பேரீச்சம்பழம், ஏலக்காய் பொடி சேர்த்து உருண்டைகள் செய்து பள்ளி மாணவர்களுக்கு கொடுத்து வந்தால் நினைவாற்றல் பெருகும்.
- சு.கண்ணகி, வாணியம்பாடி.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!