அதிமுக ஆட்சிக் காலத்தில் பயிர் கடன் தள்ளுபடியில் பல கோடி மோசடி

* சேலம் மாவட்டத்தில் மட்டும் ₹1350 கோடிக்கு தள்ளுபடி

* வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்ய உத்தரவு

* பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 520 சங்கங்களில் ரூ.322 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.12 ஆயிரம் கோடியில் சேலம்  மாவட்டத்தில் மட்டும் ரூ.1,350 கோடியும், ஈரோட்டில்  ரூ.1,085 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்படி 2 மாவட்டத்தில் மட்டும் ரூ.2,400 கோடி அளவிற்கு தள்ளுபடி  செய்யப்பட்டிருக்கிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கொரோனா காரணமாக வேலை இழந்துள்ள சூழ்நிலையில், கட்டுமான பொருட்கள் விலை குறைந்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக, சிமெண்ட் விலை குறைந்துள்ளது. நேற்று கூட சிமெண்ட் விலை ரூ.25 ஒரு மூட்டைக்கு மேலும் குறையும் என்று கூறி உள்ளனர். சிமெண்ட் இப்போது அதிகரிக்கவில்லை. 2019ம் ஆண்டு மூட்டை 410ல் இருந்து ஆரம்பித்து, ரூ.490 வரை அதிகரித்து வந்துள்ளது. இப்போது அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழை எளியவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க அம்மா சிமெண்ட் திட்டம் கொண்டு வந்தார். அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறப்பட்டது. மாநில நிதி நிலைமை அப்போதே உங்களுக்கு தெரியும். கடன் எவ்வளவு இருந்தது என்ற விவரமும் தெரிந்துதான் அறிவித்தீர்கள்.

இப்போது ஏதோதோ காரணத்தை சுட்டிக் காட்டுகிறீர்கள். அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன்: நாங்கள் ரூ.20 ஆயிரம் கோடி செலவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கொரோனா 2வது அலை இவ்வளவு தீவிரமாக இருக்கும், அதற்காக அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்து, 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி கடன் என்று வெளிப்படையாக இருக்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அதிக வட்டியுடன் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. அதுபற்றி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரிய வருகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோலுக்கு 9 ரூபாய் 48 பைசா வரி இருந்தபோது மத்திய அரசு 6 ரூபாய் 45 பைசா எடுத்துக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டுக்கு ஒரு லிட்டருக்கு 15 பைசா வந்து கொண்டிருந்தது. இன்றைக்கு ஒரு லிட்டருக்கு ஒன்றிய அரசு ரூ.32.33 எடுக்கிறது.

இதில் தமிழ்நாட்டுக்கு 2 பைசா மட்டுமே வருகிறது. மாநில உரிமையையும், சொன்ன வாக்குறுதியையும் காப்பாற்ற முதல்வர் உறுதியாக உள்ளார். சரியான நேரத்தில் உறுதியாக செயல்படுத்தி காட்டுவோம். எடப்பாடி பழனிசாமி: வெள்ளை அறிக்கை பற்றி சொல்கிறார். நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்துமே தலைமை கணக்காயர் தணிக்கைக்கு உட்பட்டது. அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை என்று கூறுகிறீர்கள், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன்: 2017-2018ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி, 11ம் தேதி அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டது. அன்றைய முதல்வர் அலுவலகத்துக்கு 8.9.2020 அன்று  அவையில் மேஜையில் வைப்பதற்காக அனுப்பப்பட்டது. அது எந்த காரணமும் கூறாமல் திருப்பி நிதித்துறைக்கு அனுப்பப்பட்டது.

 2வது முறையாக இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதலமைச்சர் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டது. எந்த காரணமும் கூறாமல் திரும்பி வந்தது. மீண்டும்15ம் தேதி முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டது. இந்த ஜூன் மாதம் மீண்டும் முதல்வருக்கு அனுப்பப்பட்டது. முதல்வர் உடனே கையெழுத்து போட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மாதிரி 5 தணிக்கை குழு அறிக்கைகள் ஒன்றரை வருடமாக வெளியிடாமல் அரசாங்கத்திடம் இருக்கிறது.  இப்போதுதான் எங்களுக்கு தெரிய வருகிறது. வெளிப்படைத்தன்மை இருந்திருந்தால் ஜனநாயக மரபுபடி, அவையின் மேஜையில் வைத்து மக்களுக்கு தெரியவந்திருந்தால், நாங்கள் அன்றைக்கே கணக்கு போட்டிருப்போம். ஆனால் இதெல்லாம் வெளியே வரவில்லை. இதான் சூழ்நிலை.

எடப்பாடி பழனிசாமி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி 2016ல் ஆட்சி அமைந்தவுடன் 5318.73 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் 2021ம் ஆண்டு அதிமுக அரசு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17428.73 கோடி ரூபாய் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பல பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில பேருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக தள்ளுபடி கடன் சான்றிதழை வழங்கப்பட வேண்டும்.

கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: 31.1.2021ல் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டு, ஏறத்தாழ ரூ.12,100 கோடி அளவுக்கு அந்த தள்ளுபடியை அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, அரசாங்கம் நபார்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி தான் கொடுத்திருக்கிறார்கள். காரணம் அவர்களிடம் இருந்து பணம் வராது என்பதால். இந்த அரசு முழுவதுமாக எல்லா வங்கிகளிலும் எந்த முறையில் கடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது, அங்கு இருக்கிற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மட்டுமல்லாமல், அனைத்து வங்கிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம், நிறைய புகார்கள் வந்துள்ளது. இதில், 136 சங்கங்களில் கிட்டதட்ட ரூ.203 கோடி அளவுக்கும், 229 சங்கங்களில் ஏறத்தாழ 108 கோடி அளவிற்கும், அதேபோல 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கும் அங்கே முறைகேடுகள் நடந்துள்ளது.

அதனால் ஆங்காங்கே இருக்கும் அனைத்து கூட்டுறவு வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, ரூ.12 ஆயிரம் கோடியில் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,350 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேபோல ஈரோட்டில்  ரூ.1,085 கோடி. இப்படி 12 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி என்றால், இரண்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.2,400 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கிட்டத்தட்ட நகை மட்டும் 44 பொட்டலம் காணவில்லை. இது 300 பவுன் நகை, அதாவது 2,500 கிராமுக்கு மேலாக காணாமல் போயுள்ளது. இது மட்டுமல்ல, ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் கடன் திருப்பி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம், 2021 வரை அதிமுக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு ஒரு போர்டு இருக்கிறது, தலைவர் இருக்கிறார். நடவடிக்கையே இல்லை. அதனால்தான் சொல்கிறோம், எல்லா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் நகைகளும், அங்கே இருக்கக்கூடிய கடன் வழங்கிய முறையும் பரிசீலித்து பின்பு அதற்கு உரிய ரசீதுகள் வழங்க வேண்டும் என்று நாங்கள் துறைக்கு ஆணையிட்டுள்ளோம். அந்த பரிசோதனை முடிய முடிய அனைத்து விவசாயிகளுக்கும் ரசீது வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. பயிர்க் கடன் தள்ளுபடி மோசடியில் பல விஐபிக்களுக்கு தொடர்பு உள்ளது. அனைத்து வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்யும்போது இவர்கள் அனைவரும் சிக்குவார்கள் என தெரிகிறது.  136 சங்கங்களில் கிட்டதட்ட ரூ.203 கோடி அளவுக்கும், 229 சங்கங்களில் ஏறத்தாழ 108 கோடி அளவிற்கும், 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கும் முறைகேடுகள் நடந்துள்ளது.

* 2021ல் அதிமுக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடன் ₹12,110 கோடியை தள்ளுபடி செய்தது.

* சேலம், ஈரோடு என இரண்டு மாவட்டங்களில் மட்டுமே ₹2400 கோடி அளவிற்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* கும்பகோணம் அருகேயுள்ள ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மட்டும் 44 பொட்டலம் 33 சவரன் மாயம்.

* 11.60 லட்சம் கடன் திருப்பி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டும், 2021 வரை அதிமுக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

Related Stories: