சாத்தான்குளம் சம்பவம் அரங்கேறிய அதே நாளில் சேலத்தில் விவசாயி கொலை… சிறப்பு எஸ்ஐ, காவலர் அதிரடி கைது!

வாழப்பாடி: சேலம் அருகே விவசாயி உயிரிழந்த வழக்கில் கைதான ஏத்தாப்பூர் எஸ்.எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் ஏத்தாப்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக எடப்பட்டிபுதூரை சேர்ந்த விவசாயி முருகேசன் (45) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இரண்டு டூவீலரில் வந்துள்ளார். இவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் வந்த டூவீலர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்துள்ளனர். இதனால், போலீசாருக்கும், முருகேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், முருகேசனை லத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து போன முருகேசனுக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இதனிடையே முருகேசனை போலீசார் தாக்கியது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, காவலர் முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு காவலரை தேடி வருகின்றனர். மாவட்ட எஸ்பி தீவீர விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, ஏத்தாப்பூர் எஸ்.எஸ்.எஸ்.ஐ. பெரியசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமா என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். நேற்று தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அன்றைய தினமே இந்தக் கொலை அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி ட்வீட்

இந்த சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள திமுக, எம்.பி.கனிமொழி,சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும்.நடப்பது  திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: