செவிலியரின் கவனக்குறைவால் விரல் துண்டிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.75,000 இடைக்கால நிவாரணம் வழங்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரிய வழக்கில் ரூ.75,000 இடைக்கால நிவாரணம் தர உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடந்த மே 25ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஜூன் 7ம் தேதி பெண் குழந்தையின் இடது கையில் மருந்து செலுத்த பொருத்தியிருந்த ஊசியை அகற்றிய போது செவிலியரின் கவனக்குறைவால் கட்டைவிரல் துண்டானது. 

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் விரலை பொருத்த மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. மேலும் கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் முறையிட்டும் பதில் இல்லை என பெற்றோர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அச்சமயம் விரல் துண்டிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.75,000 இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்தார். தொடர்ந்து, இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 26ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories:

>