நெல்லை அருகே வட்டி கேட்டு வாலிபர் மிரட்டியதால் தீக்குளித்தேன்-இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை :  வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குழியைச் சேர்ந்தவர் பிரதாபன். சென்னையில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ரேகா (32) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இந்த தம்பதிக்கு பிரவீன் (11), தன்யாஸ்ரீ (7) என இரு குழந்தைகள். இதனிடையே 2 மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வரும் பிரதாபன், தற்போது கொரோனா ஊரடங்கால் சென்னையிலேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில் ஊரில் இருந்த ரேகா, கடந்த ஜூன் 17ம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்ட உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். முதலில் அவர் குடும்பச் சூழலால் தீக்குளித்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்தார். இதனிடையே தகவலறிந்து விரைந்துவந்த பிரதாபன் ரேகாவை நேரில் சென்று பார்த்தபோது, கடன் கொடுத்த வாலிபர் வட்டி கேட்டு அவதூறாக பேசி டார்ச்சர் செய்ததால் தீக்குளித்ததாகக் கூறினார். இதை பிரதாபன் தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்தார். அதில் இடம்பெற்ற விவரம் வருமாறு:

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். தொடர்ந்து வட்டி கொடுத்து வந்தாலும், தற்போது கணவருக்கு சமையல் தொழில் முடக்கம் காரணமாக வட்டி கொடுக்க முடியவில்லை. இதனால் வட்டி வசூலிக்க வந்த வாலிபர் என்னையும், குடும்பத்தினரையும் அவதூறாக பேசி டார்ச்சர் செய்தார். இதுகுறித்து வெளியே சொன்னால், உன்னுடைய குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

அதனால் வெளியே ெசால்லவில்லை. அவரது அவதூறு வார்த்தைகளால் மனம் நொந்த நான் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தேன். என்னை தற்ெகாலைக்கு தூண்டிய அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் ரேகா கூறியுள்ளார்.இவ்வாறு ரேகா வீடியோவில் அளித்த வாக்குமூலம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories:

>