சுத்தமல்லியில் சேதமடைந்த கோடகன் கால்வாய் பாலம் சீரமைப்பு

பேட்டை : சுத்தமல்லியில் சேதமடைந்த கோடகன் கால்வாய் பாலம், தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு உள்ளது. நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மேலத்தெரு விநாயகர் கோயில் அருகே விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கோடகன் கால்வாய் பாலம் கட்டப்பட்டது. சுண்ணாம்பு அரவை கொண்டு செங்கற்கள் உதவியுடன் கற்பாலமாக அமைக்கப்பட்ட இப்பாலத்தை கடந்துதான் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு சென்று வந்தனர். இக்கால்வாயை ஒட்டி சுத்தமல்லி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கேந்தரமடை, நொச்சிமடை, முடப்பாலம்மடை, சாஸ்தாகோயில் மடை, கொழுமடை, தவணைமடை, கிருஷ்ணன்கோயில் மடை, தண்ணித்துறைமடை உள்ளிட்ட மடைகளின் மூலம் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாளைய கோரிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 2006ம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து தினகரனிலும் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில் பாலப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கியது. முழுவீச்சில் நடந்து வந்த பாலப்பணிகள் முடிவடைந்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கால்வாயில் தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. புதிய பாலம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>