தென்காசி- செங்கோட்டை பகுதியில் அனுமன் நதி பாலத்திற்கு 3வது முறையாக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரம்

தென்காசி : தென்காசி- செங்கோட்டை சாலையில் அனுமன் நதியின்  குறுக்கே பாலத்திற்காக 3வது முறையாக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது அனுமன் நதியின்  குறுக்கே ஆற்றுப்பாலம் கட்டுமானப் பணிகளின் போது இரு முறை வெள்ள நீரில்  அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது 3ம் முறையாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு  வருகிறது.

 தென்காசி- செங்கோட்டை சாலையில் துணை மின் நிலையம் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஆற்றுப்பாலம் கட்டுமானம் நடந்து வருகிறது. இருப்பினும் அனுமன் நதியில் அவ்வப்போது  ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக இப்பணியில்  இடையூறு ஏற்படுகிறது. கடந்த மே  மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட  போது பாலத்தின் கான்கிரீட் தளம் அமைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த  இரும்பு கிராதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனங்கள் செல்வதற்காக  அமைக்கப்பட்டிருந்த சர்வீஸ் சாலை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.  தொடர்ந்து தென்மேற்கு பருவமழை காலமாக இருப்பதால்  பாலம் கட்டுமானப்  பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரு சக்கர வாகனங்கள்  செல்லுகின்ற வகையில் மூன்றாவது முறையாக நேற்று ஆற்றின் குறுக்கே சர்வீஸ்  சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் கட்டுமான பணிகளை தென்மேற்கு  பருவமழையின் மூலம் இறுதிக்கட்டமான ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பணிகள்  துவங்குவதற்கு நெடுஞ்சாலைத் துறையின் ஊரக சாலைகள் பிரிவினர் திட்டமிட்டு  வருகின்றனர்.

 இதனிடையே பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் விவரம்  எதுவும் அறிவிப்பு பலகையாக வைக்கப்படாத நிலையில் தென்காசி மற்றும்  செங்கோட்டை ஆகிய இரு வழித்தடங்களிலும் ஏராளமானோர் குறிப்பாக வெளியூரைச்  சேர்ந்தவர்கள் இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்களில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடம் வரை வந்து திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.

தற்போது  சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டால் சக்கர வாகனங்கள் சென்று திரும்புவது சிக்கல்  எதுவும் இருக்காது. இருப்பினும் கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ்  சாலையில் செல்ல இயலாத அளவிற்கு ஆற்றுப் பகுதி செங்குத்தான பள்ளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையின் ஊரக சாலைகள் பிரிவின் உதவி கோட்டப் பொறியாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது உடனடியாக அறிவிப்பு பலகை  வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

Related Stories: