எலும்பு, பற்கள் சீரான வளர்ச்சிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பனை தரும் இயற்கையின் கொடை “நீரா பானம்”-உணவியல் துறை பேராசிரியை தகவல்

எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கு உதவி புரியும் “நீரா பானம்” நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கிறது தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து பெறப்படும் ஒருவகை ஊட்டச் சத்துகள் நிறைந்த பானம் தான் நீரா. நீரா என்பது பதநீருக்கும், கள்ளுக்கும் இடைப்பட்ட பானமாகும். மேலும், நீராவில் போதை தரும் ஆல்கஹால் 0.0001 சதவீதம் கூட இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. எனவே, இதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி பருகலாம். நீராவில், பி வைட்டமின்களான வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி7, பி9, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-12 மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவு நிறைந்துள்ளன. நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை கொடுக்கின்றன.

மேலும் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. நீரா பானத்தினை கோடை காலத்தில் பருகுவதினால் உடல் சூட்டால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பினை தடுத்து உடலின் நீர்ச்சத்தினை சமன் செய்கின்றது. மேலும், உடல் குளிர்ச்சியாக வைக்கவும் உதவி புரிகிறது. எனவே, நீரா பானத்தினை கோடை காலத்தில் இயற்கையின் கொடை என அழைக்கின்றோம்.

பாதுகாப்பான முறையில் நீராவை சேகரிக்கும் முறை: நீராவை பதநீர் இறக்குவது போல எளிதில் இறக்க முடியாது. பொதுவாக நீராவை தென்னம் பாளைகளிலிருந்து மண்பானையில் விவசாயிகள் சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கும்போது நீரா எளிதில் புளிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், நீராவில் காணப்படும் எளிதில் ஆவியாகும் கலவைகளின் வாசனைகளால் நமக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் நீராவில் கலந்துவிட வாய்ப்பு உள்ளது. நீரா எளிதில் புளிப்பதை தடுக்க 5 டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் இறக்க வேண்டும்.

வடிக்கட்டின நீராவில் 0.05 முதல் 0.1 சதவீதம் வரை சிட்ரிக் அமிலம் மற்றும் 10 பிபி அளவு நிசின் எனும் பாதுகாப்பான் சேர்த்த பின் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் 8 முதல் 12 செ.மீ. இடைவெளி விட்டு நிரப்ப வேண்டும். பிறகு, காற்று புகாவண்ணம் மூடியிட்டு சுமார் 90 முதல் 95 செ.கிரேடு வெப்ப நிலையில் 25 முதல் 30 நிமிடம் வரை சூடுப்படுத்தி உடனடியாக குளிர்ந்த நீரில் பாட்டில்களில் இட்டு (27 முதல் 30 செ.கிரேடு வெப்ப நிலைக்கு) குளிர்விக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீராவை 3 மாதம் முதல் 4 மாதம் வரை கெடாமல் பதப்படுத்தி பயன்படுத்தலாம். என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியை கமலசுந்தரி கூறினார்.

Related Stories: