கச்சா எண்ணெய் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது: மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: கச்சா எண்ணெய் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைக்கிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ100ஐ எட்டிவிட்டது. டீசல் விலை ரூ98ஐ கடந்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ3.33ம், டீசல் விலை ரூ4.15ம் அதிகரிக்கப்பட்டது. நடப்பு மாதத்தை பொருத்தவரை கடந்த 1ம் தேதியில் இருந்து இன்று வரை இதுவரை 12 முறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் டெல்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கச்சா எண்ணெய் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 75 டாலரை தாண்டி உள்ளதை சுட்டிக்காட்டி பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

நாம் 80 % எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். இதனால், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: