கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா கவச உடை அணிந்து கலெக்டர் ஆய்வு

கோவை : கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சமீரன் பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

கோவையில் கொரோனா நோய்த் தொற்றின் 2வது அலை குறைந்து வரும் நிலையில், 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகப்படுத்துதல் உள்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்காக தனி வார்டுகள் அமைப்பு, பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவு அமைத்து குழந்தைகளுக்கான ஆக்சிஜன் முகக்கவசம், மருந்துகளை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகளை பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர்களிடம் கொரோனா 3வது அலையை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.  மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது, ‘‘கொரோனா நோய்த் தொற்றின் 3வது அலை குறித்தோ, இதில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்தோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

எனினும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, பிற அரசு மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் படுக்கைகள் அமைப்பது, ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் வைத்திருத்தல், குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை கொள்முதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் 30 தீவிர சிகிச்சை படுக்கைகள், 100 ஆக்சிஜன் படுக்கைகள், 370 சாதாரண படுக்கைகள் என 500 படுக்கைகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 15 தீவிர சிகிச்சை படுக்கைகள், 70 ஆக்சிஜன் படுக்கைகள், 100 சாதாரண படுக்கைகள் என 185 படுக்கைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது’’ என்றார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: