சித்துராஜபுரம்-பூலாவூரணி சாலை சீரமைப்பு பணி தீவிரம்

சிவகாசி : தினகரன் செய்தி எதிரொலியால், சித்துராஜபுரம்-பூலாவூரணி சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகாசி அருகே 3 கி.மீ தொலைவில் உள்ளது பூலாவூரணி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சித்துராஜபுரம் செல்ல 4 கி.மீ தூரம் கிராம சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாக எந்த வித சீரமைப்பு பணிகளும் நடைபெறாததால் குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலையில் பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ளது. பட்டாசு ஆலைகளில் ஏதேனும் விபத்து நடந்தால் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலம் இந்த சாலையில் உள்ள பாலங்களும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டி இருந்தது. சித்துராஜபுரத்தில் இருந்து பூலாவூரணிக்கு ஏராளமான தொழிலாளர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள இந்த சாலையை சீரமைத்து பழைய பாலங்களை அகற்றி புதிய பாலங்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ‘தினரகன்’ நாளிதழில் இது குறித்து செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது சித்துராஜபுரம்-பூலாவூரணி சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினகரன் செய்தி எதிரொலியால் இந்த சாலை சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெறப் போகிறது என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>