×

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது ஏன்?: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!!

சென்னை: மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது ஏன்? என்று  சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் 16வது சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசினார். 


அப்போது தமிழக அரசு ஒன்றியம் என்று பயன்படுத்துவதை குறித்து கேள்வி எழுப்பினார். புதிதாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதக்கூடிய கடிதங்களில் மத்திய என்ற வார்தையை பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தது. இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான விளக்கத்தை சட்டப்பேரவையில் அளித்தார். 


அதில், ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதை சிலர் சமூக குற்றம் என்று கூறுகின்றனர். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற சொல்லையே தாங்கள் பயன்படுத்துகின்றோம். ஒன்றியம் என்பது ஒரு தவறான சொல் அல்ல என்று குறிப்பிட்டார். அதேபோல் இதற்கு முன்பாக கலைஞர், அண்ணா பயன்படுத்தாத வார்த்தையை தற்போது தமிழக அரசு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 


அவ்வாறாக அல்ல. 1957ம்  ஆண்டு திமுக-வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றியம் என்ற வார்த்தையை தாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம் என்ற விளக்கத்தையும் முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருப்பதால் மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத்தான் இனி பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்தார். 


இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன், இந்தியா என்ற கருத்து முன்வைக்கப்படும் போது அதில் மாநிலமும் உள்ளடங்கியுள்ளது. ஒன்றிணைந்து செயல்படும் சூழல் உள்ள போது ஒன்றியம் என்ற வார்த்தையை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்று வினவினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை. 


மாநிலங்கள் அனைத்தும் இணைந்து உருவாக்கியது தான் இந்தியா. ஆகவே அதன் அடிப்படையில் தான் ஒன்றியம் என்று அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே தமிழக அரசு மத்திய அரசு என்று தெரிவிக்காமல் ஒன்றிய அரசு என்று தெரிவிக்கிறது என்று விளக்கமளித்தார்.



Tags : Government ,Union ,Chief Minister ,MK Stalin ,Legislative Assembly , Central Government, Union Government, Legislature, Chief Minister MK Stalin
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...