கொரோனா ஊரடங்கால் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடு தேவை குறைவால் சம்பங்கி பூ விலை வீழ்ச்சி-திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் : கொரோனா ஊரடங்கால் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், தேவை குறைவால் சம்பங்கி பூக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, மைலாப்பூர், மட்டப்பாறை, கீழ் திப்பம்பட்டி, குஞ்சனம்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, கன்னிவாடி, கரிசல்பட்டி ஆகிய ஊர்களில் சம்பங்கி பூ அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்கின்றனர். ஒரு முறை பயிரிட்டால் 3 ஆண்டு வரை மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் தினசரி 50 முதல் 60 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். ஓராண்டுக்கு ரூ.3 லட்சம் வரை பூக்களை விற்கலாம். சாகுபடி செய்ய ரூ.1.5 லட்சம் செலவானாலும், ரூ.1.5 லட்சம் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். திருமண முகூர்த்தங்கள் மற்றும் விஷேச நாட்களில் பூச்சந்தைகளில் ஒரு கிலோ சம்பங்கி ரூ.300க்கு மேல் விற்கலாம். சாதாரண நாட்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை சந்தைகளில் விற்பனையாகிறது.

இந்நிலையில், கொரோனாவால் திருமணம் மற்றும் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேவை குறைந்து சம்பங்கி பூ கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த‌ வாரம்‌ 3 முகூர்த்த நாட்களில் சம்பங்கி பூ கிலோ ரூ.40 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

இது குறித்து குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ரெங்கசாமி கூறுகையில், ‘குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியில் சம்பங்கி பூ அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கால் பஸ் போக்குவரத்து இல்லாமல் உள்ளூர்களிலே பூக்களை விற்கிறோம். வெளியூர்களுக்கு அனுப்ப முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ சம்பங்கி பூ ரூ.5க்கு விற்றது.

இதனால், பறிக்கும் கூலி கூட கிடைக்காது என செடியிலேயே பூக்களை விட்டுவிட்டோம். விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. சம்பங்கி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். எனவே, திருமணங்கள், திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். இதனால், சம்பங்கி பூக்களின் தேவை அதிகரித்து நல்ல விலை கிடைக்கும்‘ என்றார்.

Related Stories: