மாசடைந்து வரும் நீர்நிலை பழநி வையாபுரி குளத்தில் கட்டிடக் கழிவுகள் குவிப்பு-தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழநி : பழநியில் கட்டிடக் கழிவுகளை குவித்து மாசுபடும் வையாபுரி குளத்தை மீட்டு சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழநியில் நகரின் மையப்பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் வையாபுரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணையில் இருந்து நீர்வரத்து இருக்கும். இக்குளம் மூலம் சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது. பழநி நகரில் போதிய வடிகால் வசதி இல்லை. கடந்த திமுக ஆட்சியின்போது பழநிக்கு அறிவிக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

இதனால், பழநி நகரில் சாக்கடை கழிவுகள் அனைத்தும் வையாபரி குளத்தில் கலந்து வருகிறது. இதனால், பக்தர்கள் நீராடும் புண்ணிய குளமாக இருந்த வையாபுரிகுளம் தற்போது மினி கூவமாக மாறிவிட்டது.

இந்நிலையில் வையாபுரி குளத்தின் வடக்குக்கரை பகுதியில் தற்போது கட்டிடங்களின் இடிப்பு கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், குளத்தின் நீர்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்துள்ளது.நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதால், குளத்தின் வடக்குக்கரை பகுதியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது.

இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில், பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தி பேசினார். கடந்த தேர்தல் நேரத்தில் ஆதாயத்திற்காக குளம் சீரமைப்புப் பணிக்கு அவசர அவசரமாக பூமிபூஜை போடப்பட்டது. ஆனால், அதன்பின் எவ்வித பணியும் நடைபெறவில்லை. எனவே, தற்போதுள்ள திமுக அரசு திட்டத்தை மறுமதிப்பீடு செய்து மக்களுக்கு பயன்படும் வகையில், கரையை பலப்படுத்துவது, நடைபாதை அமைப்பது போன்ற பணிகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>