ஏ.டி.எம். டெபாசிட் இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது வங்கியின் கடமை!: SBI ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

சென்னை: ஏ.டி.எம். டெபாசிட் இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை வங்கிக்கு உள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் எஸ்.பி.ஐ.,  சி.டி.எம். இயந்திரங்களில் பணம் திருடப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்தார். 

தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து சி.டி.எம். இயந்திரத்தின் பாதுகாப்பை எஸ்.பி.ஐ. வங்கி மேம்படுத்த வேண்டும். ஏ.டி.எம்., சி.டி.எம். இயந்திரங்களின் செயல்பாடு, பணம் நிரப்புவது, அவுட்சோர்சிங் தருவதை கைவிட வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், வங்கிகளின் நேரடி பார்வையில் ஏ.டி.எம்., சி.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்ப வேண்டும் என தெரிவித்தார். 

எஸ்.பி.ஐ. வங்கிக்கு தமிழ்நாட்டில் 1233 பணம் டெபாசிட் இயந்திரங்கள் உள்ளன. 1,233 இயந்திரங்களில் சென்னையில் மட்டும் 300 சி.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இரவு நேரங்களில் ஏ.டி.எம்., சி.டி.எம். மையங்களில் காவலாளிகளை பணியமர்த்த வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அதுவும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக உள்ள  ஏ.டி.எம். மையங்களில் 24 மணி நேரமும் காவலாளி இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். கடந்த ஒரு வாரமாக  எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களை குறித்துவைத்து வடமாநில கொள்ளையர்கள்  கைவரிசை காட்டி வருகின்றனர். சுமார் 15 லட்சம் வரை நூதன முறையில் கொள்ளையர்கள் திருடியுள்ள சம்பவம் எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. 

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக காவல்நிலையத்திற்கு தொடர் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுகுறித்து போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம். பாதுகாப்பை உறுதி செய்வது வங்கியின் கடமை என்று பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: