மதுரை-மானாமதுரை இடையே மின்மயமாக்கும் பணி முடிந்தும் சோதனை ஓட்டம் நடத்த தாமதம்

மானாமதுரை : மதுரையில் இருந்து மானாமதுரை வரையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் முடிந்தும் பல மாதங்களாகியும் சோதனை நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் கொரோனா ஊரடங்கு முடிந்து மின்சார ரயில்களை இயக்குவது தாமதமாகலாம் என ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது.

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலும் மானாமதுரையில் இருந்து விருதுநகர் வரையிலும் மானாமதுரையில் இருந்து திருச்சி வரையிலும் மின்மயமாக்கும் பணியிலை தனியார் பங்களிப்புடன் ரயில்வே மின்மயமாக்கல் துறை செய்து வருகிறது. இதில் மானாமதுரை வரை 47 கி.மீ. தூரமுள்ள பாதையை மின்மயமாக்கும் பணியினை கடந்த 2020ம் ஆண்டு பிப்.15ம் தேதி ரயில்வே பொதுமேலாளர் ஒய்.பி.,சிங் துவக்கி வைத்தார்.

மதுரையில் இருந்து சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், கால்பிரிவு, மானாமதுரை ரயில் நிலையம் வரை மின்கம்பங்கள் நடப்பட்டு மின்வயர்கள் பொருத்தும் பணிகள் முடிந்துள்ளது. மேலும் ரயில்வே நிலையங்களுக்கு அருகில் மின்பாதை அமைக்கும் பணியும், மின்சார டிரான்ஸ்பார்மர்கள், அதற்கான இறுதிக்கட்ட பணிகள் கடந்த மார்ச்ச மாதம் முடிக்கப்பட்டது.

ஏப்ரல் மாத துவக்கத்தில் டவர்வேகன் மூலம் அந்த கம்பங்களில் மின் ஒயர்களின் உறுதிதன்மை, பகிர்மான நிலையத்தில் இருந்து வரும் மின்பாதையில் உள்ள இணைப்புகள் ஆகியவற்றை மின் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மின்சாரம் வழங்கும் பீடர்களுக்கும் ரயில்பாதையில் உள்ள மின்வயர்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு மதுரையில் இருந்து மானாமதுரை ரயில்வே நிலையம் வரை அனைத்து பணிகளும் கடந்த ஏப்ரல் மாதமே முடிந்த நிலையில் சோதனை ஒட்டம் சான்றிதழ் அளிப்பது உள்ளிட்டவை தாமதமாகி வருகிறது.

இதனால் கொரோனா ஊரடங்கு முடிந்து முழுவீச்சில் ரயில்களை இயக்கும்போது மீண்டும் டீசல் இஞ்சின் பயன்பாட்டால் எரிபொருள் வீணடிக்கப்படும். 2023க்குள் நாடு முழுவதும் மின்பாதைகளில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்த மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில், மதுரை-மானாமதுரை இடையே மின்மயமாக்கும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு விலக்கப்பட்டு ரயில்கள் முழுமையாக இயக்கும்போது இப்பாதையில் தினமும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும். மீண்டும் டீசல் இஞ்சினே இயக்கப்பட்டால் எரிபொருள் வீணாக்கப்படும் என்பதால் மின்பாதையில் ரயிலை இயக்க சோதனைகளை நடத்தி மின்சார ரயில்களை இயக்கவேண்டும் என்றார்.

Related Stories: