திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்தாண்டு மலேரியா தொற்று பாதிப்பில்லை

*ரூ.2 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும்

திருச்சி : மத்திய மண்டத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஒரு மலேரியா பாதிப்பு கூட பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாவட்டங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக மலேரியா காய்ச்சல் பாதிப்பை தடுக்கவும், மலேரியா தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் மலேரியா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. இதன்படி 2017ம் ஆண்டில் 5,444 பேர், 2018ம் ஆண்டில் 3,758 பேர், 2019ம் ஆண்டில் 2,088 பேர், 2020ம் ஆண்டில் 891 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மலேரியா தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மலேரியா எதிர்ப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி கடந்த ஓர் ஆண்டில் ஒரு மலேரியா தொற்று கூட பதிவாகாத மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாவட்டங்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் 12 மாவட்டங்கள் மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

அதேபோல் 2020ம் ஆண்டு 29 மாவட்டங்களில் ஒரு மலேரியா பாதிப்பு கூட பதிவாக வில்லை. இதில் மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களும் அடங்கும். இதன்படி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கொரோனா தொற்று கூட பதிவாகிவில்லை. எனவே இந்த 8 மாவட்டங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதைத் தவிர்த்து வீடுகளுக்கு உள்ளே மருந்து தெளிக்கும் பணியும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமபுறங்களில் இந்த பணி மிகவும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 4.41 லட்சம் வீடுகளில் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: